சினிமா செய்திகள்
திருமணம், காதலை வெறுக்கிறேன்“கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ பிடிக்காது”-நடிகை சார்மி

காதல் அழிவதில்லை, லாடம், காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சார்மி தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
காதல் அழிவதில்லை, லாடம், காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சார்மி தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தற்போது தெலுங்கு டைரக்டர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து புதிய சினிமா கம்பெனி ஆரம்பித்து படங்கள் தயாரித்து வருகிறார். இருவருக்கும் காதல் இருப்பதாகவும் பேச்சு உள்ளது.

இதுகுறித்து சார்மி அளித்த பேட்டி வருமாறு:-

“நானும் பூரி ஜெகன்னாத்தும் இணைந்து படம் தயாரிப்பதால் எங்களுக்குள் காதல் என்று கதை கட்டுகிறார்கள். ஆண், பெண் சேர்ந்து வேலை செய்வதை தவறாக பார்க்கும் மனோபாவம் மறைய வேண்டும். வாழ்க்கை முழுவதும் நடிகையாகவே இருப்பது எனக்கு பிடிக்காத காரணத்தால்தான் பட தயாரிப்புக்கு வந்தேன். எனக்கு பிடித்தமாதிரி வாழ்வேன். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட மாட்டேன்.

வாழு, வாழவிடு என்பது எனது சித்தாந்தம். இயற்கையாகவே எனக்கு துணிச்சல் உண்டு யாருக்கும் பயப்பட மாட்டேன். வீட்டில் என்னை பையன்மாதிரி வளர்த்தனர். உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். வாழ்க்கையில் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன். எவர் மீதும் காதலும் வராது. அதை வெறுக்கிறேன். தனிமையில் வாழ்வது எனக்கு பிடிக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

திருமணம் செய்தால் கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்றெல்லாம் நிறைய கேள்விகளும் வரும். திருமணமாகாதவர்கள் அந்த சங்கடங்கள் எதுவும் இல்லாமல் பிடித்த மாதிரி வாழலாம். எனது முடிவை பெற்றோரும் ஏற்றுள்ளனர். திருமணம் வாழ்க்கைக்கு பாதுகாப்பானது என்கின்றனர். பணம்தான் பாதுகாப்பு. கணவன் சம்பாதிக்காவிட்டால் மனைவிக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். உடல்நிலை சரியில்லை என்றால் பணத்துக்கு எங்கே செல்வாள்.

எனக்கு பெரிய வீடு, கார் இருக்கிறது. நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்லும் வசதி இருக்கிறது. இந்த பாதுகாப்பு எனக்கு போதும்.”

இவ்வாறு சார்மி கூறினார்.