சினிமா செய்திகள்
கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் அடுத்த முதல்-அமைச்சர்-நடிகர் சாருஹாசன்

கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் அடுத்த முதல்-அமைச்சர் என்று நடிகர் சாருஹாசன் கூறியுள்ளார்.
கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் அடுத்த முதல்-அமைச்சர்-நடிகர் சாருஹாசன்

நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்துள்ளனர். இவர்களால் தமிழக அரசியல் களத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், அடுத்த தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக இருப்பார்கள் என்றும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருவருமே ஆட்சியியை பிடிக்கும் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்பது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

“தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக கர்நாடகாவை சேர்ந்தவர்தான் வருவார். இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம். உங்களை இந்த ஆண்டு நான் புரிந்து கொள்வேன். என்னை அடுத்த வருடம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”

இவ்வாறு சாருஹாசன் கூறியுள்ளார்.

அடுத்த முதல்வர் ரஜினிகாந்த் என்பதைத்தான் சாருஹாசன் சூசகமாக தெரிவித்து இருப்பதாக ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சாருஹாசன் கருத்தை சமூக வலைத்தளங்களில் அவர்கள் பரப்பி வருகிறார்கள்.