சினிமா செய்திகள்
நடிகர்கள் நாட்டை ஆள நினைப்பதா? பட விழாவில் பாரதிராஜா பேச்சு

“நடிகர்கள் நாட்டை ஆள நினைப்பதா?” என்று பட விழாவில் டைரக்டர் பாரதிராஜா பரபரப்பாக பேசினார்.
சென்னை, 

‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக ஜெய்வந்த், கதாநாயகியாக ஐரா நடித்துள்ளனர். யுரேகா டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் டைரக்டர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

“தமிழ் மண்ணையும் மக்களையும் மொழியையும் என் தாய் மாதிரி பார்க்கிறேன். இந்த மக்களிடம் இருந்துதான் கதைகளை உருவாக்கினேன். படங்கள் எடுத்தேன். கடைசி மூச்சு இருக்கும்வரை இந்த இனத்துக்கும் மொழிக்கும் கலாசாரத்துக்கும் சிறு கீறல் விழாமல் பார்த்துக்கொள்வேன். அதற்காகத்தான் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை ஆரம்பிக்கப்பட்டது. உணர்வுள்ள இயக்கங்கள் சேர்ந்து பெரிய பலத்தை கொடுத்து விட்டனர்.

நடிகர்கள்

தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். எவருக்கும் தலை சாய்க்க வேண்டிய அவசியம் இல்லை. சத்யராஜ் ராணுவம் வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று கூறியிருக்கிறார். என்னை அன்னியன் என்கிறார்கள். தமிழ் உங்களுக்கு அன்னியமாகி விட்டதால் நான் அன்னியன்தான்.

காட்டுப்பய காளி என்பதற்கு பதிலாக கண்ணியமான காளி என்று இந்த படத்துக்கு பெயர் வைத்து இருக்கலாம். நடிகருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தோம். வசனம் சொல்லி கொடுத்தோம். கையில் செயினை கொடுத்து சுற்ற வைத்தோம். கடைசியில் மக்களை முட்டாளாக்கி நாட்டை ஆளவேண்டும் என்று வந்து நிற்கும் நிலை இருக்கிறது. நடிகருக்கு பாலாபிஷேகம், கட் அவுட்கள் வைத்தபோதே ரசிகர்களை தடுக்காதது தவறாகி விட்டது.

பாலியல் கொடுமைகள்

இந்தியா முழுவதும் சமீப காலமாக பாலியல் கொடுமைகள் அதிகம் நடக்கிறது. இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களை, கோர்ட்டு விசாரணை தண்டனை என்று செல்லாமல் பொது இடங்களில் ஆயிரம் பேரை கூட்டி வைத்து சுட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அறவழியில் போராடுகிறோம். நியாயம் கிடைக்காவிட்டால் வேறு வழிகளில் போராடுவோம்.”

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.