சினிமா செய்திகள்
முதன்முதலாக போலீஸ் வேடத்தில், பரத்

நடிகர் பரத் முதன்முதலாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.
“4 வருடங்களுக்கு முன்பே எனக்கு ஒரு போலீஸ் கதை வந்தது. ‘கால்ஷீட்’ பிரச்சினையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதனால், ‘காளிதாஸ்’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் என்றதும், உடனே நடிக்க சம்மதித்தேன். இது, ஒரு குற்ற பின்னணியிலான திகில் படம். 4 நாட்களில் நடக்கும் கதை. இந்த படத்தில் நடித்தது, ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்கிறார், நடிகர் பரத்.

அவர் மேலும் கூறும்போது, “போலீஸ் அதிகாரி வேடம் என்பதால் உடல் எடையை அதிகரிக்க நன்றாக சாப்பிட்டேன். கடுமையான உடற்பயிற்சிகள் செய்தேன். காக்கி உடை அணிந்ததும் கம்பீரமாக உணர்ந்தேன். படத்தின் 90 சதவீத காட்சிகளில், காக்கி உடையில்தான் வருவேன். என்னுடன் சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். மலையாள நடிகை அன் ஷீத்தல் கதாநாயகியாக நடித்துள்ளார்” என்றார்.

‘காளிதாஸ்’ படத்தை பற்றி திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருக்கும் ஸ்ரீசெந்தில் கூறியதாவது:-

“இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். பரத் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்து இருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தினகரன், எம்.எஸ்.சிவநேசன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். படத்தின் இறுதி கட்ட பணிகள், இப்போது வேகமாக நடைபெறு கிறது.”