“மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்” - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன்

படமான சர்ச்சை கதை காரணமாக, மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் என டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

Update: 2018-05-02 22:30 GMT

சமூக பிரச்சினைகளுக்காக வழக்குகள், போஸ்டர்களை கிழித்தல், போராட்டங்கள் நடத்துதல் என்று பரபரப்பாக பேசப்பட்ட டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரிலேயே சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், குஷ்பு, ரோகிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விக்கி டைரக்டு செய்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

“என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்கி, டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாக சொல்லி கதையை படிக்க கொடுத்தார். அதை படித்த பிறகு டிராபிக் ராமசாமி போஸ்டரை கிழிப்பவராக மட்டுமின்றி சமூக போராளியாகவும் இருந்ததை அறிந்தேன். அவருக்கு நடந்தது போல் எனது வாழ்க்கையிலும் சம்பவங்கள் நடந்துள்ளன.

எனவே இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் 45 வருடங்களில் 69 படங்கள் இயக்கி விட்டேன். எனது வாழ்க்கையில் நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக இந்த படத்தின் கதாபாத்திரம் இருக்கும். இந்த படம் சர்ச்சை கதைகளுடன் உருவாகி உள்ளது. இதற்காக மிரட்டல்கள் வரும். அதற்காக நான் பயப்பட மாட்டேன்.

எனது முதல் படமான சட்டம் ஒரு இருட்டறையிலேயே மிரட்டல்களை பார்த்தவன். நீதிக்கு தண்டனை படம் எடுத்து அப்போதைய முதல்-அமைச்சரின் மிரட்டலையும் சந்தித்தேன்.” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

மேலும் செய்திகள்