சினிமா செய்திகள்
கோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள்: மணிரத்னம் படக்குழுவினர் அசுத்தப்படுத்தியதாக புகார்

சென்னை கோவளம் கடற்கரையில் கண்ணாடி துண்டுகள் கிடந்ததாக மணிரத்னம் படக்குழுவினர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

மணிரத்னம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய், ஜோதிகா, அதிதிராவ் உள்ளிட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில வாரங்களாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் படப்பிடிப்பை நடத்தினர்.

இதற்காக அங்கு படப்பிடிப்பு தளவாடங்கள் குவிக்கப்பட்டு நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பங்கேற்று நடித்தனர். தொழில் நுட்ப கலைஞர்களும் குவிந்து இருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

ஆனால் மறுநாள் அந்த பகுதிக்கு வந்த மக்கள் குப்பைகள், கண்ணாடி துண்டுகள், கூர்மையான குச்சிகள் போன்றவை சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கண்ணாடி துண்டுகளையும் குப்பைகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சுத்தம் செய்தனர். அப்போது சிலருக்கு கண்ணாடி குத்தி ரத்த காயம் ஏற்பட்டது.

மணிரத்னம் படக்குழுவினர் குப்பைகளை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு சென்று விட்டதாக அந்த பகுதியை சுத்தம் செய்தவர்கள் குற்றம் சாட்டினர். இதனை படக்குழுவினர் மறுத்தனர். படப்பிடிப்பு முடிந்ததும் 20 பேரை வைத்து கடற்கரையை சுத்தம் செய்து விட்டுத்தான் வந்தோம். கண்ணாடி துண்டுகள் கிடந்ததற்கு நாங்கள் பொறுப்பு அல்ல” என்று கூறினர்.