திகில் கதைகளுக்கு மவுசு குறைகிறது; பேயை விட்டு விலங்குகளுக்கு தாவிய பட உலகம்

திகில் கதைகளுக்கு மவுசு குறைந்து வருவதால் பேயை விட்டு விலங்குகளுக்கு பட உலகம் தாவியுள்ளது.

Update: 2018-05-03 23:30 GMT

தமிழில் பேய் படங்களுக்கு கடந்த சில வருடங்களாக வரவேற்பு இருந்தது. குறைந்த செலவில் எடுத்த பேய் படங்கள் கூட பெரிய லாபத்தை கொடுத்தன. பீட்சா, காஞ்சனா போன்ற பேய் படங்கள் வெற்றிக்கு பிறகு பெரிய ஹீரோக்களும் பெரிய இயக்குநர்களும் கூட பேயை நோக்கி ஓடினார்கள். ஆனால் இப்போது பேய் படங்கள் மோகம் முடிவுக்கு வருகிறது. கடைசியாக வந்த பலூன், நாகேஷ் திரையரங்கம், மெர்குரி, தியா போன்ற பேய் படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்கின்றனர். இதனால் தமிழ் சினிமா பேயிடம் இருந்து விலங்குகள் பக்கம் திரும்பியுள்ளது. சாண்டோ சின்னப்பா தேவர், ராமநாராயணன் ஆகியோர் விலங்குகளை வைத்து எடுத்த அனைத்து பழைய படங்களுமே வெற்றி பெற்றன.

இடையில் விலங்குகள் நல வாரியம் கெடுபிடியால் விலங்குகளை காட்ட சினிமாக்காரர்கள் பயந்தனர். ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றிக்கு பிறகு அந்த நிலைமை மாறி விலங்குகளை வைத்து அதிக படங்கள் எடுக்கின்றனர். சிபிராஜ் நடிப்பில் ராணுவ நாயின் சாகசங்களை வைத்து உருவான நாய்கள் ஜாக்கிரதை படம் வசூல் குவித்தது. இப்போது ரஜினி நடிப்பில் தயாராகி உள்ள காலா படத்திலும் நாய்க்கு முக்கிய கதாபாத்திரம் உள்ளது. ஜீவா ‘கொரில்லா‘ என்ற படத்தில் சிம்பன்ஸி குரங்குடன் நடித்து வருகிறார்.

பாம்பை வைத்து உருவாகும் பாம்பன் படத்தில் சரத்குமார் பாம்பாக நடிக்கிறார். இதேபோல் ஜெய் நடிப்பில் பழி வாங்கும் பாம்பு கதையாக நீயா 2 உருவாகிறது. இந்த 2 படங்களிலுமே வரலட்சுமி நடிக்கிறார். அடுத்து ஒட்டகத்தை மையமாக வைத்து எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் சிகை படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் ஒரு படம் உருவாகிறது. சீமராஜா படத்தில் சிறுத்தை வருகிறது. விலங்குகளை வைத்து மேலும் பல படங்கள் தயாராகி வருகின்றன.

மேலும் செய்திகள்