எம்.ஐ.டி யின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமனம்

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-05-04 06:23 GMT
சென்னை,

நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மோட்டார் பைக் பந்தயங்களில் ஆர்வம் உண்டு. இதற்காக நடிப்பதை ஒத்திவைத்து விட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று போட்டிகளில் பங்கேற்று வந்தார். விமானம் ஓட்டுவதிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. விமானம் ஓட்டும் லைசென்சும் வாங்கி வைத்துள்ளார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளார்.

ருசியாக பிரியாணி சமைப்பார். படப்பிடிப்பின் கடைசி நாளில் தனது கையால் பிரியாணி சமைத்து படக்குழுவினருக்கு பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் அஜித்குமாருக்கு புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அந்த கல்லூரியின் ஹெலிகாப்டர் சோதனை விஞ்ஞானி மற்றும் ஆளில்லா விமான பயிற்சி ஆலோசகராக அவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கும் பணிக்கு அஜித்குமாரை நியமனம் செய்து உள்ளனர். ஒரு தடவை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகுப்புக்கு செல்ல அவருக்கு ரூ.1,000 சம்பளம் பேசப்பட்டு உள்ளது. அந்த தொகையை ஏழை மாணவர்கள் கல்விக்கு வழங்கும்படி அஜித்குமார் கூறிவிட்டார். இந்த நியமனத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்