சினிமா செய்திகள்
சுருதிஹாசன் படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் வருகை தந்த சரிகா

சுருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற டைரக்டர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய இந்தி படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
தாதா உலகம் பற்றிய கதை இது. சுருதிஹாசன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் படப்பிடிப்பு, மும்பையில் நடைபெற்றது. அப்போது சுருதிஹாசனின் அம்மாவும், நடிகையுமான சரிகா அங்கு திடீர் வருகை தந்தார். மகளின் நடிப்பை நேரில் பார்த்தார். இதுபற்றி படக்குழுவினரிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:-

“மகேஷ் மஞ்ச்ரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க சுருதிஹாசன் ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட சரிகா, உண்மையிலேயே சந்தோஷப்பட்டார். மகேஷ் மஞ்ச்ரேக்கர் போன்ற டைரக்டர்களின் வழிகாட்டலை சுருதி பின்பற்றினால், அவரின் திறமை மேலும் பளிச்சிடும் என்றார். அத்துடன், சுருதியை இதுபோன்ற தேசிய விருது பெற்ற டைரக்டர்களின் கைகளில் ஒப்படைத்ததற்காக, அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்த தன் தாயாரை அங்கு பணியாற்றிய அனைவருக்கும் தனித்தனியாக அறிமுகப்படுத்தி வைத்தார், சுருதிஹாசன். அதன் பிறகு தன் தாயாரின் எண்ணத்தை நன்றாக உணர்ந்திருந்த சுருதிஹாசன், படத்தில் தான் ஏற்றுள்ள கதாபாத்திரம் பற்றியும், டைரக்டர் தன்னிடம் வேலை வாங்கும் நுட்பம் பற்றியும் அம்மாவிடம் சுருதிஹாசன் அழகாக விளக்கினார்.

மகளின் நேர்த்தியான விளக்கத்தை கேட்ட சரிகா, படப்பிடிப்பு தளத்தில் நீண்ட நேரம் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார். படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்து தன்னை உற்சாகப்படுத்திய அம்மா சரிகாவிடம், மகள் சுருதிஹாசன் நன்றி தெரிவித்தார்.