சர்ச்சை காட்சிகள்: தணிக்கை குழு கெடுபிடியில் கமலின் ‘விஸ்வரூபம்-2’

சர்ச்சைக்குரிய காட்சிகளால் தணிக்கை குழு கெடுபிடியில் கமலின் விஸ்வரூபம்-2 படம் உள்ளது.

Update: 2018-05-06 23:45 GMT
கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் முடிந்து இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வர தயாராகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த படம் வருகிறது. இதன் முதல்பாகம் எதிர்ப்புகளில் சிக்கி சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே வெளியானது.

தற்போது ‘விஸ்வரூபம்-2’ படமும் தணிக்கை குழுவினரின் கெடுபிடியில் சிக்கி உள்ளது. தமிழில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு யூஏ சான்றிதழ் பெற்றது. இந்தி பதிப்பையும் தணிக்கை குழுவினர் பார்த்து பல காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். 17 சர்ச்சை காட்சிகளை நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு படக்குழுவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தணிக்கை குழுவினர் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தி பதிப்புக்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தயாரிப்பு தரப்பில் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

விஸ்வரூபம்-2 படத்தில் பூஜாகுமார், ராகுல்போஸ், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்