“இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை” -நடிகர் சங்கிலி முருகன்

இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை என்று நடிகர் சங்கிலி முருகன் கூறினார்.

Update: 2018-05-08 22:30 GMT
நரை என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சங்கிலி முருகன், சந்தான பாரதி, ஜூனியர் பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.கேசவன் தயாரித்துள்ளார். விவி டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் டி.சிவா கலந்து கொண்டு பேசும்போது, “முதியவர்களை வைத்து நல்ல கதையம்சத்துடன் நரை படத்தை எடுத்துள்ளனர். பழைய படங்கள் வெளியான காலத்தில் சினிமா நன்றாக இருந்தது. படங்கள் அதிக நாட்கள் ஓடின. தயாரிப்பாளர்கள் நிறைய லாபம் சம்பாதித்தார்கள். இப்போது வசூல் குறைந்துள்ளது. புதிய படங்கள் தயாரிக்க நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டும், பைனான்சியர்களிடம் கடன் கேட்டும் கெஞ்ச வேண்டி உள்ளது. திரைப்பட தயாரிப்பு செலவுகளை குறைத்து சிக்கனமாக படங்கள் எடுக்க வேண்டும். சிறு பட்ஜெட் படங்களும் ஜெயிக்க வேண்டும். சமூகத்தை மேம்படுத்தும் படங்கள் வர வேண்டும். சிறுமைப்படுத்தும் படங்கள் எடுக்க கூடாது” என்றார்.

பழம்பெரும் நடிகர் சங்கிலி முருகன் பேசும்போது, “அந்த காலத்தில் திரைப்படம் பார்க்க போவது திருவிழாவுக்கு போவது மாதிரி இருக்கும். இப்போது எல்லாமே மாறி இருக்கிறது. பல படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை. ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்திக்கொண்டு இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு எளிமையாக மனதை தொடுகிற வகையில் படங்கள் கொடுத்தால் நன்றாக ஓடும். நரை படம் வெற்றி பெறும்” என்றார். 

மேலும் செய்திகள்