சினிமா செய்திகள்
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடரும் மிரட்டல்கள்

பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று கைநிறைய சம்பளமும் வாங்கியவர் பிரகாஷ்ராஜ்.
தென்னிந்திய மொழி படங்களிலும் இந்தியிலும் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் வந்து பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று கைநிறைய சம்பளமும் வாங்கியவர் பிரகாஷ்ராஜ். இவரது கால்ஷீட்டுக்காக முன்னணி கதாநாயகர்களே காத்திருந்த நிலை இருந்தது. அப்படிப்பட்ட பிராஷ்ராஜுக்கு சமீபகாலமாக தொடர்ந்து சிக்கல்கள்.

இவரது நெருங்கிய தோழியும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் கொலை செய்யப்பட்டதில் இருந்து மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். டுவிட்டரில் கண்டித்து விமர்சனங்கள் பதிவிட்டார். நடக்க உள்ள கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரமும் செய்தார்.

இதனால் பிரகாஷ்ராஜுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. அவரது காரை மறித்தும் தகராறு செய்தனர். அவர் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்புகள் கிளம்புகிறது. இதனால் இந்தி படங்களில் பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்ய அஞ்சுகிறார்கள்.

மைசூருவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிரகாஷ்ராஜ், நிருபர்களிடம் கூறும்போது, “நான் பா.ஜனதாவுக்கும் இந்து அமைப்புகளுக்கும் எதிராக பேசி வருவதால் என்னை கொல்ல சதி நடக்கிறது. சில அமைப்புகள் நேரடியாகவே எனக்கு கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளன. நான் எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம். அதற்காக நான் அஞ்சவில்லை” என்றார்.