சினிமா செய்திகள்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்துஇயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்

பிரபல நடிகை பூனம் கவுர் இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புக்கு நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் கூறி இந்திய திரை உலகையே அதிரவைத்தார். தனது ஸ்ரீலீக்ஸ் முகநூலில் பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பெயர்களையும் வெளியிட்டார். இந்த நிலையில் பிரபல நடிகை பூனம் கவுரும் இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

இவர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பயணம், 6, வெடி, என் வழி தனி வழி, நாயகி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். பூனம் கவுருக்கும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கும் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன.

தோல்வி பட நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் ஒரு டைரக்டர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சதியில் ஈடுபட்டு இருப்பதாக பூனம் கவுர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“அந்த டைரக்டருக்கு அதிக படங்கள் இல்லை. ஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டு இருக்கிறார். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டும் திரித்தும் பேசுகிறார். நான் அதுகுறித்து நேரில் கேட்டபோது ஒன்றும் தெரியாதவர்போல் பதில் சொன்னார். அவருக்கு வேண்டிய பெண்கள் மட்டுமே சினிமாவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இவரை பற்றி வெளியே சொல்ல முடியாத பல விஷயங்கள் இருக்கிறது. அவருக்கு வேண்டிய பெண்கள் தொடர்ந்து தோல்வி படம் கொடுத்த பிறகும் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பது ஏன் என்று புரியவில்லை. மற்றவர்கள் கலை உணர்வுகளை கொலை செய்கிறார். அவர் செய்யும் வினையே அவரை தண்டிக்கும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இயக்குனரின் பெயரை பூனம் கவுர் வெளியிடவில்லை. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.