‘கேன்ஸ்’ பட விழாவில் தனுஷ்

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ் கலந்து கொண்டார்.

Update: 2018-05-11 23:30 GMT
துள்ளுவதோ இளமை படத்தில் 2002-ல் அறிமுகமான தனுஷ் படிப்படியாக வளர்ந்து ராஞ்சனா, ஷமிதாப் என்று இந்தி வரை போனார். இவர் பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் கலக்கியது. நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்கள் எடுத்த பிறகு இப்போது ஹாலிவுட்டுக்கும் போய் உள்ளார். தனுஷ் நடித்துள்ள ‘எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜார்னி ஆப் த பஹிர்’ என்ற படம் இந்திய, பிரான்ஸ் கூட்டு தயாரிப்பில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாராகி உள்ளது. கனடாவை சேர்ந்த பிரபல டைரக்டர் கென் ஸ்காட் டைரக்டு செய்துள்ளார். இந்த மாதம் இறுதியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படம் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதற்காக தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கேன்ஸ் பட விழாவில் இந்திய-பிரான்ஸ் திரைப்படங்கள் வர்த்தகம் சம்பந்தமாக நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கேற்று பேசுகிறார்.

இந்த படம் மூலம் ஆங்கில பட வாய்ப்புகளை பிடிக்கும் திட்டத்தில் இருக்கிறார். தமிழில் தனுஷ் கைவசம் வடசென்னை, மாரி-2, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய 3 படங்கள் உள்ளன. ரஜினிகாந்தை வைத்து அவர் தயாரித்துள்ள காலா படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 

மேலும் செய்திகள்