சினிமா செய்திகள்
சினிமா கேள்வி பதில்! குருவியார்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, விஜய் திடீரென்று ரசிகர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறாரே..அவரும் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ன? (வி.கஜேந்திரன், சென்னை–23)

விஜய் தனது ரசிகர்களை வருடத்துக்கு ஒருமுறை சந்தித்து பேசி, அவர்களுக்கு விருந்து கொடுப்பது வழக்கம். அடுத்த மாதம் அவர் வெளிநாடு பயணமாக இருப்பதால், முன்கூட்டியே ரசிகர்களை சந்தித்துப்பேசி, அவர்களுக்கு விருந்து கொடுத்தாராம்!

***

குருவியாரே, அனுஷ்கா– தமன்னா ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமை–வேற்றுமை என்ன? (வே.கவுதம், முகப்பேர்)

அனுஷ்கா, தமன்னா இருவரும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகிகளாக இருப்பது, இருவருக்கும் உள்ள ஒற்றுமை. அனுஷ்கா மப்பும் மந்தாரமுமாக செழிப்பான தோற்றம் கொண்டவர். தமன்னா, ஒல்லியான தோற்றம் கொண்டவர். இது, வேற்றுமை!

***

காஜல் அகர்வால் தமிழ் படத்தில் நடிக்க ஆரம்பித்து எத்தனை வருடங்கள் ஆகின்றன? (வெ.குமரன், உசிலம்பட்டி)

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. பத்து வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நீடித்து இருக்கும் கதாநாயகிகள் பட்டியலில், இவரும் இணைந்து விட்டார்!

***

குருவியாரே, அஜித்குமார் ரொம்ப இரக்க சுபாவம் உள்ளவர் என்று அவருடன் பழகியவர்கள் கூறுகிறார்களே...உண்மையா? (கே.தர்‌ஷன், நாகர்கோவில்)

தன்னிடம் பணிபுரியும் உதவியாளர்களுக்கு சொந்தமாக வீடுகள் கட்டிக் கொடுத்து, அஜித்குமார் தனது இரக்க சுபாவத்தை நிரூபித்து இருக்கிறார்!

***
பாலா டைரக்‌ஷனில் விக்ரம் மகன் நடிக்கும் ‘வர்மா’ ஒரு தெலுங்கு படத்தின் தழுவலாமே...? (எஸ்.ரவீந்தர், கோவை)

தெலுங்கு படத்தின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதை அவர் பாணியில், வேறு ஒரு படமாக மாற்றி விட்டாராம், டைரக்டர் பாலா!

***

‘சிங்கம்-3’ படத்தின் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் ஹரி, ‘சிங்கம்-4’ படத்தை இயக்குவாரா? (ப.சக்திமாரி, கல்லிடைக்குறிச்சி)

“அப்படி எந்த திட்டமும் இல்லை” என்று டைரக்டர் ஹரி உள்பட படக்குழுவினர் அனைவரும் கூறுகிறார்கள்!

***

குருவியாரே, ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயாவுக்கு எத்தனை மகன்-மகள் இருக்கிறார்கள்? (கோ.மணிகண்டன், வாலாஜாப்பேட்டை)

கே.ஆர்.விஜயாவுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருக்கிறார்!

***

ஏவி.எம்.ராஜன்-புஷ்பலதா தம்பதிகள் இப்பொழுது என்ன செய்கிறார்கள்? (சிவ.முத்துசாமி, விட்டிலாபுரம்)

ஏவி.எம்.ராஜன்-புஷ்பலதா இருவரும் கிறிஸ்தவ மத போதகர்களாக இருக்கிறார்கள்!

***

நடிகர்-டைரக்டர் கே.பாக்ய ராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் நடித்த முதல் படம் எது, அந்த படத்தின் கதாநாயகன் யார், வில்லன் யார், படத்தை இயக்கியவர் யார்? (ஆர்.செல்வகுமார், பாப்பநாயக்கன் பாளையம்)

பூர்ணிமா பாக்யராஜ் அப்போது திருமணம் ஆகாததால், ‘பூர்ணிமா ஜெயராம்’ ஆக இருந்தார். அவர் முதன்முதலில் நடித்த படம், ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்.’ (மலையாளம்) அந்த படத்தின் கதாநாயகன், ‘ஒருதலை ராகம்’ சங்கர். வில்லன், மோகன்லால். படத்தை இயக்கியவர், பாசில்!

***

குருவியாரே, ராகவா லாரன்ஸ் எடுத்து வரும் ‘காஞ்சனா-3’ படம், ‘காஞ்சனா-2’ படத்தைப்போல் காமெடி கலந்த திகில் படமா அல்லது திகிலே இல்லாத குடும்ப படமா? (ப.இசக்கி சுடலை, சென்னை-40)

‘காஞ்சனா-3,’ முழுக்க முழுக்க (நகைச்சுவை கலந்திராத) திகில் படமாக உருவாகி வருகிறது!

***

வடிவேல் இப்போது எந்த படத்தில் நடித்து வருகிறார்? (எஸ்.அரிகிருஷ்ணன், கோணலூர்)

அவர் நடிக்க முடியாது என்று சொன்ன படத்துக்காக பஞ்சாயத்து நடக்கிறது. தீர்ப்பை எதிர்பார்த்து வடிவேல் காத்திருக்கிறார். அதன் பிறகே அவர் நடிக்கும் படத்தை முடிவு செய்வாராம்!

***

குருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்-கே.ஆர். விஜயா ஜோடியாக நடித்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடிய 2 படங்களை கூறுங்களேன்..? (பெ.மோகன், தூத்துக்குடி-3)

1.திரிசூலம், 2.தங்கப்பதக்கம்!

***

நடிகர் பிரசன்னா அடுத்து நடிக்க இருக்கும் புதிய படங்கள் எவை? (அருண்குமார், பண்ருட்டி)

பிரசன்னா, 2 புதிய படங் களில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அந்த படங் களை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்!

***

குருவியாரே, பிரபுதேவா மீது நயன்தாராவுக்கு இன்னும் கோபம் தீராதது ஏன்? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

நெஞ்சில் சுமந்த காதலும், கையில் (பச்சை) குத்திய வலியும் இன்னும் தீர்ந்து போகாமல், நயன்தாராவுக்குள் மிச்சம் இருக்கிறதாம்!

***

‘தியா’ படத்தில், சாய்பல்லவி யின் நடிப்பு எப்படி? (வி.சகாயமேரி, பாலக்காடு)

கலைக்கப்பட்ட கருவை நினைத்து கதறி கண்ணீர் விடும் காட்சியில், சாய்பல்லவி உருக வைத்து விட்டார்!

***

குருவியாரே, ஓவியா காதல் திருமணம் செய்து கொள்வாரா, அல்லது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வாரா? (பி.தினேஷ் குமார், அன்னதானப்பட்டி)

திருமணத்துக்கு முன்பே மணமகனும், மண மகளும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையில், ஓவியாவுக்கு உடன்பாடு உண்டாம். அதனால், காதல் திரு மணத்தையே அவர் தேர்வு செய்வார்!

***

“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடலை பாடியவர் யார், பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (எம்.தங்கராஜா, சிவகங்கை)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘உயர்ந்த மனிதன்.’ பாடியவர், பி.சுசீலா. நடித்தவர், வாணிஸ்ரீ!

***

குருவியாரே, இப்போதெல்லாம் நடிகர்கள் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்கம், தயாரிப்பு, கதை-வசனம், பாடல், அரசியல் என்று இறங்கி விட்டார்களே...? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

ஒன்று கைவிட்டால், இன்னொன்று கை கொடுக்கும் என்ற நம்பிக்கைதான் காரணம்!

***