சினிமா செய்திகள்
ஹாலிவுட் படத்தில் புதிய தோற்றத்தில் தனுஷ்

தனுஷ் முதல் தடவையாக ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பஹிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் முதல் தடவையாக ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பஹிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் இது தயாராகி உள்ளது. ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்கோட் டைரக்டு செய்துள்ளார். இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பிரான்ஸ் சென்றுள்ளனர்.

அங்கு ஹாலிவுட் படத்தின் தமிழ் தலைப்பை தனுஷ் வெளியிட்டார். தமிழில் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெயர் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்றுள்ள வரி என்பது குறிப்பிடத்தக்கது. அதையே படத்துக்கு தலைப்பாக்கி விட்டார். படத்தில் தலைப்பாகையுடன் வரும் தனுசின் வித்தியாசமான தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். படம் முழுக்க இதே தோற்றத்தில் நடிக்கிறாரா? அல்லது சில காட்சிகளில் மட்டும் வருகிறாரா? என்று தெரியவில்லை.

ஏற்கனவே இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். அதுபோல் இந்த ஹாலிவுட் படத்தையும் ஆங்கிலத்தில் வெளியாகும் அதே நாளில் தமிழிலும் திரையிடுகின்றனர். இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.