சினிமா செய்திகள்
கர்நாடக தேர்தல் முடிவு: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிர்ச்சி

கர்நாடக தேர்தல் முடிவுகளால் நடிகர் பிரகாஷ்ராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சொந்த மாநிலமான கர்நாடகா தேர்தல் முடிவுகள் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன.

சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரகாஷ்ராஜ். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் பேசி வந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கண்டித்தார். கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரசாரமும் செய்தார்.

இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. காரை மறித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இந்தி பட வாய்ப்புகளும் பறிபோனது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இந்தி பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயங்கினர். பா.ஜனதாவை எதிர்ப்பதால் இந்தி திரையுலகினர் ஒதுக்குவதாக பிரகாஷ்ராஜே கூறியிருந்தார். இந்த நிலையில் கர்நாடக தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியது பிரகாஷ்ராஜுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், கன்னட, தெலுங்கு மொழிகளில் பிரகாஷ்ராஜ் அதிக படங்களில் நடித்து வந்தார். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக அவர் இல்லை என்ற அதிருப்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் இருப்பதால் வில்லன் வேடங்களுக்கு இந்தி நடிகர்களை இறக்குகிறார்கள். இதனால் தமிழிலும் படங்கள் குறைந்துள்ளது. இனிமேல் கன்னட படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதை அங்குள்ள பா.ஜனதா கட்சியினர் தடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.