சினிமா செய்திகள்
என் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதா? –நடிகர் விஷால் ஆவேசம்

நடிகர் விஷால்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘இரும்புத்திரை’ திரைக்கு வந்துள்ளது. இந்த படத்துக்கு எதிராக தியேட்டர்கள் முன்பு போராட்டங்கள் நடந்தன.
சென்னையில் நேற்று விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது:–

‘‘இரும்புத்திரை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொழுதுபோக்கும் சமூக பிரச்சினைகள் சம்பந்தமான கருத்துக்களும் படத்தில் உள்ளன. இந்த படத்தை திரைக்கு கொண்டுவர கடைசி நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். யார் தொல்லை கொடுத்தார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை.

எல்லோரும் கடன் வாங்கித்தான் படம் எடுக்கிறார்கள். அதை திருப்பியும் கொடுக்கின்றனர். ஆனால் இரும்புத்திரை படத்தை தடுக்க என்னை பிடிக்காதவர்கள் முயற்சித்தனர். நண்பர்கள் சிலர் காரை விற்றும் நிலத்தை அடமானம் வைத்தும் பணம் தர முன்வந்தார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருக்கும் எனக்கே இந்த நிலைமை ஏற்பட்டது.

எதிர்ப்புகளை மீறி படம் திரைக்கு வர சிலர் உதவினார்கள். படம் வெளியான பிறகு கூட ஆதார் கார்டு உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து படத்தில் காட்சி இருப்பதை கண்டித்து தியேட்டர்கள் முன்னால் போராட்டங்கள் நடத்தினார்கள். படத்தை பார்க்கலாம் என்று தணிக்கை குழு சான்றிதழ் அளித்த பிறகு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி போராடுவது முறையல்ல.

இதையெல்லாம் மீறி படம் வெற்றிபெற்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய மித்ரனுக்கும் வில்லனாக நடிக்க சம்மதித்த அர்ஜுனுக்கும் எனது நன்றி.’’

இவ்வாறு விஷால் கூறினார்.