சினிமா செய்திகள்
கண்கலங்கிய அஞ்சலி

அஞ்சலிக்கு பிறகு வந்த நடிகைகள் முன்னுக்கு வந்து விட்டனர். ஆனால் இவரது மார்க்கெட் மட்டும் ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.
கற்றது தமிழ் படத்தில் அறிமுகமாகி அங்காடி தெருவில் பிரபலமானார். அதன்பிறகு வந்த பல படங்கள் சரிவை கொடுத்தன. குடும்ப பிரச்சினைகளும் பின்னுக்கு தள்ளியது.

அஜித்குமாரின் மங்காத்தாவில் சிறிது நேரம் வந்து போனார். எங்கேயும் எப்போதும், கலகலப்பு படங்கள் அவருக்கு மீண்டும் சிறந்த நடிகை அங்கீகாரத்தை கொடுத்தன. அதன்பிறகு நடித்த பல படங்கள் அடிவாங்கின. ராம் இயக்கத்தில் மம்முட்டியுடன் நடித்துள்ள பேரன்பு உலக படவிழாக்களில் பங்கேற்று வருவதால் அடுத்த ரவுண்டுக்கு அதையே நம்பி இருக்கிறார்.

இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள்–2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்புகிறார். இதில் ஒரு காட்சி அஞ்சலியை உருக வைத்து கண்ணீர் சிந்த வைத்து விட்டதாம். ‘‘என் சினிமா வாழ்க்கையில் சிறந்த காட்சியில் நடித்தேன். இதற்கு உயிர் தந்த இயக்குனருக்கு நன்றி. ஆனந்த கண்ணீர் வருகிறது’’ என்று டுவிட்டரில் அஞ்சலி கூறியுள்ளார்.