சினிமா செய்திகள்
படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?

தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக வந்த சார்மி இப்போது நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். பட தயாரிப்பில் முழுமையாக இறங்கப் போவதாக அறிவித்தார்.
சார்மியும் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும் இணைந்து ‘மெக்பூபா’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்தனர். இதை பூரி ஜெகன்னாத் இயக்கினார். அவரது மகன் ஆகாஷ்பூரி கதாநாயகனாக நடித்தார்.

இந்த படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவிக்கும் என்று எதிர்பார்த்த சார்மிக்கு ஏமாற்றம் மிஞ்சியது. ரூ.18 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது. இதன்மூலம் பூரி ஜெகன்னாத்துக்கும், சார்மிக்கும் ரூ.12 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தெலுங்கு திரையுலகினர் சொல்கின்றனர்.

ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீடு மற்றும் சில சொத்துக்களை விற்றுத்தான் இந்த படத்தை எடுத்ததாக பூரி ஜெகன்னாத் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த தோல்விக்கு பிறகு தயாரிப்பில் இருந்து விலகி விடலாமா? என்று சார்மி யோசிக்கிறாராம்.