நந்திதா தாஸ் சொல்லும் திரை உலக பரிதாபம்

‘பிராக்’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை நந்திதா தாஸ், அதன்பிறகு சுமார் பத்தாண்டுகள் கழித்து, ‘மான்டோ’ என்ற படத்தை இயக்குகிறார்.

Update: 2018-05-20 06:32 GMT
‘பிராக்’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை நந்திதா தாஸ், அதன்பிறகு சுமார் பத்தாண்டுகள் கழித்து, ‘மான்டோ’ என்ற படத்தை இயக்குகிறார். இது, ஆங்கிலேய ஆட்சிக் கால இந்தியா வில் பிறந்த பாகிஸ்தானிய எழுத்தாளர் சதத் ஹசன் மான்டோவின் வாழ்க்கை வரலாறு கதை. அந்த படத்தின் அனுபவங்களை நந்திதா பகிர்ந்துகொள்ளும் பேட்டி:

முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படத்தை இயக்க இ்த்தனை ஆண்டு கால இடைவெளி ஏன்?

‘பிராக்’ படம் எனக்கு ஏமாற்றம் தந்ததால், அடுத்து நான் எந்த படத்தையும் டைரக்டு செய்ய விரும்பவில்லை. எனது முதல் படம் வெளியான காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் இல்லை. அதனால் விளம்பரங்களுக்கு தயாரிப்பாளரின் தயவையே எதிர்பார்த்திருக்க வேண்டியிருந்தது. ‘பிராக்’ படத்துக்குப் பின் ‘பெட்வீன் த லைன்ஸ்’ என்ற நாடகத்தை நானே எழுதி, இயக்கி, நடித்தேன். அதற்காக எனது சக்தியை எல்லாம் செலவழித்தேன். ஆனால் என் மகனையும் எல்லா இடங்களுக்கும் கூட்டிக்கொண்டு அலைவது கஷ்டமாக இருந்தது. குழந்தைகள் திரைப்படக் கழகத் தலைவர் என்ற பொறுப்புக்கான கடமைகளையும் செய்தேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். பத்திரிகையில் கட்டுரையும் எழுதினேன். அதனால் சினிமாவை இயக்க நேரம் இல்லாமல் போய்விட்டது.

‘மான்டோ’ குறித்த படத்தை நீங்கள் இயக்கத் தீர்மானித்தது ஏன்?

‘பிராக்’ படத்தை இயக்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் மான்டோவின் சிறுகதைகளை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க எண்ணியிருந்தேன். 2012-ல் மான்டோவின் எழுத்துகளில் நான் மேலும் ஆழமாக மூழ்கியபோது அந்த எண்ணம் மேலும் விரிவடைந்தது. உணர்வுரீதியாகவும் படைப்புரீதியாகவும் மான்டோவின் கதையைச் சொல்ல நான் தயாராவதற்கு ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய வாழ்க்கை, அனைவருக்கும் சொல்லப்பட வேண்டியது என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் எப்போது மான்டோவின் படைப்புகளை அறிந்தீர்கள்?

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது முதன்முதலில் அவரின் எழுத்துக்களைப் படித்தேன். சில ஆண்டு கள் கழித்து, தேவநகரி எழுத்தில் அச்சிடப்பட்ட அவரது படைப்புகளின் முழுமையான தொகுப்பான ‘தஸ்தாவேஜ்’-ஐ வாங்கினேன். அவரது எளிமையான, அதேநேரம் ஆழ்ந்த பொருள் பொதிந்த விவரிப்பிலும், தான் வாழ்ந்த காலத்தில் மக்கள், அரசியல் குறித்து அவர் அழகாக எடுத்துவைத்த விதத்திலும் நான் அசந்துபோனேன்.

மான்டோ மீதான ஆபாசக் குற்றச்சாட்டுகளை நீங்கள் உங்கள் படத்தில் பதிவு செய்திருக்கிறீர்களா?

ஆமாம். அது இடம்பெற்றிருக்கிறது, இன்றைய சூழலுக்குப் பொருத்தமாகவும் இருக்கிறது. மான்டோ தனது காலத்திலும் தடையை எதிர்த்துப் போராடியிருக்கிறார். இன்றும் நாம் ‘சென்சார்ஷிப்’பை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. தனது காலத்தில் நடந்தவற்றை நேர்மையாகப் பதிவு செய்ததற்காக மான்டோவை ஆங்கிலேய அரசு மூன்று முறையும், பாகிஸ்தானிய அரசு மூன்று முறையும் வழக்கில் இழுத்தடித்து இருக்கின்றன. மான்டோவின் எழுத்துகள் தெற்காசியப் பகுதிக்கு மட்டுமல்லாமல் இன்று உலகம் முழுக்கப் பொருந்துவதாக இருக்கின்றன. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் இன்றும் தாக்கப்படுவதும், அவர்களின் குரல் நசுக்கப்படுவதும் எல்லா இடங்களிலும் நடக்கிறது. உண்மையைப் பேசவும், வேறுபட்டுச் சிந்திக்கவும் அனுமதிக்கும்போதுதான் ஒரு சமூகம் வளர்கிறது, மேம்படுகிறது. அதற்கான சூழல் உருவாகவேண்டும்.

மான்டோ பாத்திரத்துக்கு நீங்கள் நவாசுதீன் சித்திக்கியை ஏன் தேர்வு செய்தீர்கள்?

நான் திரைக்கதையை எழுதியபோதே என் மனதில் இருந்தது நவாசுதீன்தான். 2013-ல் கேன்ஸ் திரைப்பட விழாவின்போது நான் நவாசுதீனிடம் இப்படத்தைப் பற்றிக் கூறினேன். அப்போதே மிகவும் ஆர்வமாகிவிட்ட அவர், எப்போது அந்த படம் தயாரிக்கப்பட்டாலும் தான் அதில் நடிப்பேன் என்றார். சினிமாவில் சரியான நடிகர்கள் மட்டும் அமைந்துவிட்டால் 70 சதவீதப் பணி முடிந்துவிட்டது என்பார்கள். நவாசுதீன் விஷயத்தில் அதுதான் நடந்தது. ஒரு நடிகராக நவாசுதீன் அளவற்ற திறமை கொண்டவர், அவர் கண்களுக்குள் எப்படியோ மான்டோ புதைத்திருக்கிறார். மான்டோ குறித்து நான் செய்த ஆய்வு, அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல்கள், நவாசுதீனின் அனுபவம், திறமை எல்லாவற்றையும் கொண்டு மான்டோவின் கதாபாத்திரத்தில் நாங்கள் பல நுணுக்கமான விஷயங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். நவாசுதீனின் இயற்கையான உள்ளுணர்வு, ஆழமான நுண்ணுணர்வு, தீவிரம், நகைச்சுவை உணர்வு எல்லாம், அவர் எளிதாக மான்டோவாக மாற உதவி புரிந்திருக்கின்றன.

நீங்கள் படத்தில் நடித்தும் பல ஆண்டுகள் ஆகிவிட்டதே?

நான் கடந்த 7 ஆண்டுகளாகவே ஆய்வு, எழுத்து, படப் பிடிப்பு என்று பரபரப்பாக இருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் நான் எனது குழந்தையையும் கவனிக்க வேண்டியிருந்தது. இதெல்லாம்தான் நான் படத்தில் நடிக்காத தற்குக் காரணம்.

இந்தியத் திரையுலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தும், இன்று பெண்கள் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறித்தும் உங்கள் கருத்து?

தற்போது நான் நிறைய சினிமாக்கள் பார்ப்பதில்லை. எனவே நான் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது. ஆனால், அதிகமான பெண்கள் திரையுலகுக்கு வருவதும், அவர்களில் பலர் இயக்கத்தில் ஆர்வம் காட்டுவதும் புதிய கதைகளையும் புதிய விஷயங்களையும் கொண்டுவரும் என்று எண்ணுகிறேன். திரையுலகில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம், பெண்களின் பங்கு குறைவு. ஜனத்தொகையில் சரிபாதியானவர்கள் பெண்கள். அவர்களின் கதைகள் பகிர்ந்துகொள்ளப்படாவிட்டால் அது பரிதாபம்தான்.

புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு உங்கள் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி...?

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்பட விழா என்பதுடன், மிகச் சிறந்த சினிமாக்களை வெளிச்சப்படுத்தும் தளமாகவும் கேன்ஸ் விளங்குகிறது. எனது படம் ‘மான்டோ’, தனது பயணத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடங்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!

மேலும் செய்திகள்