சினிமா செய்திகள்
பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் தொந்தரவு: நடிகை அலியாபட் கருத்து

பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் தொந்தரவு குறித்து நடிகை அலியாபட் கருத்து தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்புக்காக நடிகைகளை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்தினார். இந்திய பட உலகில் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஸ்ரீரெட்டி கொடுத்த துணிச்சலால் பாதிக்கப்பட்ட நடிகைகள் செக்ஸ் தொல்லைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்து உள்ளனர்.

நடிகைகள் பாதுகாப்புக்கு திரைத்துறையில் சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. பிரபல இந்தி டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான், படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் சகஜமாக நடக்கிறது. இதன்மூலம் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து முன்னேறுகிறார்கள் என்று கூறினார். நடிகர் சத்ருகன் சின்ஹாவும் இதனை ஆமோதித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையும் இயக்குனர் மகேஷ்பட் மகளுமான அலியாபட் இதுகுறித்து கூறியதாவது:-

“பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேசுகின்றனர். இதனால் சினிமா துறை மோசம் என்று மக்கள் நினைக்கும் நிலைமை இருக்கிறது. சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்க அனைவரும் போராடுகிறார்கள். அவர்களை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். வாய்ப்புக்காக ஆண்களும் பெண்களும் தவறானவர்களிடம் சிக்க வேண்டி உள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை உலக அளவில் இருக்கிறது. நடிக்கும் ஆசையில் வருபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் யோசனை என்னவென்றால், யாராவது படுக்கைக்கு அழைத்தால் அதுகுறித்து பெற்றோர்களிடம் கூறுங்கள். போலீசில் புகார் அளித்து அவர்களை பிடித்து கொடுங்கள்.” இவ்வாறு அலியாபட் கூறினார்.