கர்நாடகத்தில் ஆரம்பிக்காமலே முடிந்த‘மேட்ச்’ - நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்

கர்நாடகத்தில் ஆரம்பிக்காமலே மேட்ச் முடிந்து விட்டது என நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலாக கூறியுள்ளார்.

Update: 2018-05-20 23:15 GMT
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கர்நாடக தேர்தல் முடிவும் அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற முறையில் பா.ஜனதாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்ததும் ஏமாற்றத்தை அளித்தது. தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க பிரகாஷ்ராஜ் தீவிர பிரசாரம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் தொடர்ச்சியாக விமர்சித்தார்.

இதனால் பா.ஜனதா தொண்டர்கள் பிரகாஷ்ராஜ் செல்லும் இடமெல்லாம் மறியல் நடத்திய சம்பவங்கள் நடந்தன. தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்ததை பிரகாஷ்ராஜ் கண்டித்தார். “கர்நாடகத்தில் அரசியல் அமைப்பு படுகொலை செய்யப்படுவது தொடங்கி விட்டது. மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் இனிமேல் வெளியே வராது. எம்.எல்.ஏக்கள் எந்த பக்கம் தாவுவார்கள் எந்த சொகுசு விடுதியில் தங்குகிறார்கள் என்பதெல்லாம் பரபரப்பான செய்திகளாக வெளிவரும்” என்றார்.

இந்த நிலையில் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது பிரகாஷ்ராஜுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனது டுவிட்டர் பக்கத்தில், “கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை. இனி வண்ணமயமான விஷயங்கள் தொடர இருக்கிறது. ‘மேட்ச்’ தொடங்கும் முன்பே முடிந்து விட்டது. 55 மணிநேரம் கூட இந்த ஆட்சியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மக்கள் பக்கம் நிற்பேன்” என்று பா.ஜனதாவை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்