சினிமா செய்திகள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்றது, தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டது. #MakkalNethiMayyam
சென்னை,

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, உறுப்பினர்கள் சேர்க்கைக்காக மய்யம் .காம் (www.maiam.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கி இருந்தார். இதனை அடுத்து விசிலி என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கமல் அழைப்பு விடுத்திருந்தார். கமல்ஹாசன் மாநில அரசியல் குறித்தும் ஊழல் பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து கமல் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் இன்று பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டது. மேலும்  கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், மே 31-க்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், கட்சியின் தலைவர் - கமல்ஹாசன், துணைத்தலைவர் - ஞானசம்பந்தன், செயலாளர் - அருணாச்சலம், பொருளாளர் - சுரேஷ் என விண்ணப்பத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.