சினிமா செய்திகள்
ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு நடிகை செக்ஸ் புகார்

80 பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு நடிகை செக்ஸ் புகார் கூறியுள்ளார்.
நடிகை ஏசிய அர்ஜெண்டோ-தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன்
ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் 30 வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தகவல் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, கார டெலவிங்னி உள்பட பலர் பாலியல் புகார் கூறினார்கள்.

80 நடிகைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னார்கள். இப்போது இத்தாலியை சேர்ந்த நடிகை ஏசிய அர்ஜெண்டோவும் பாலியல் புகார் கூறியுள்ளார். பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவின் நிறைவு நாளில் கலந்துகொண்டு இதுகுறித்து அவர் பேசியதாவது:-

“கேன்ஸ் நகரில் 1997-ல் திரைப்பட விழா நடந்தபோது ஹார்வி வெயின்ஸ்டீன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த சமயத்தில் எனக்கு 21 வயதுதான் ஆகி இருந்தது. ஓட்டல் அறையில் வைத்து மிரட்டி கற்பழித்தார். அவரை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கேன்ஸ் பட விழாவை பெண்களை வேட்டையாட அவர் பயன்படுத்தினார்.

அதன்பிறகு 5 ஆண்டுகள் என்னை ஆட்டிப்படைத்தார். அவர் சொன்னதை கேட்டு நடக்க வேண்டி இருந்தது. எதிர்த்து பேசினால் எனது சினிமா வாழ்க்கையை நாசமாக்கி விடுவார் என்று பயந்தேன். அவரை தூக்கி கொண்டாடிய சினிமா உலகத்தில் இப்போது அவமானப்பட்டு நிற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ஹார்வி வெயின்ஸ்டீனின் இத்தாலிய வழக்கறிஞர் பிலாமினோ குசானோ இதனை மறுத்தார். “ஏசிய அர்ஜெண்டோ கூறிய புகாரில் உண்மை இல்லை. அவர் விருப்பப்பட்டுத்தான் வெயின்ஸ்டீனுடன் உறவு வைத்துக்கொண்டார். அதன்பிறகு வெயின்ஸ்டீனின் ‘பி மங்கி’ படத்தில் நடித்தார்” என்றார்.