சினிமா செய்திகள்
கங்குலி வாழ்க்கை படமாகிறது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்க்கை சினிமா படமாகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. நல்ல வசூலும் பார்த்தது. இப்போது கங்குலி வாழ்க்கையும் படமாகிறது.
பிரபல இந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இதுசம்பந்தமாக கங்குலியை நேரில் சந்தித்து பேசி ஒப்புதல் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்கின்றனர். கங்குலி தனது வாழ்க்கையை ‘எ செஞ்சுரி இஸ் நாட் எனப்’ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதி வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து உள்ளனர்.

இதுகுறித்து கங்குலியிடம் கேட்டபோது, “இப்போதுதான் ஏக்தா கபூர் பட நிறுவனத்துடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். விரைவில் முழு விவரங்களையும் தெரிவிக்கிறேன்’‘ என்றார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி வாழ்க்கையும் படமாகிறது.

வாழ்க்கை வரலாறு படங்கள் தற்போது அதிகம் தயாராகி வருகின்றன. காமராஜர், பெரியார் வாழ்க்கை ஏற்கனவே படங்களாக வந்துள்ளன. நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி வாழ்க்கையும் படமாகி உள்ளன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கையும் படமாகி வருகிறது.