சினிமா செய்திகள்
பட விழா மேடையில் அழுத நடிகை

ஜி.வி.பிரகாஷ்-அர்த்தனா ஜோடியாக நடித்துள்ள படம் ‘செம’. வள்ளிகாந்த் டைரக்டு செய்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்-அர்த்தனா ஜோடியாக நடித்துள்ள படம் ‘செம’. வள்ளிகாந்த் டைரக்டு செய்துள்ளார். டைரக்டர் பாண்டிராஜ், ரவிசந்திரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். படத்தின் பாடல், டிரெய்லரை வெளியிட்டு படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மேடையில் கதாநாயகி அர்த்தனா அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் டைரக்டர் பாண்டிராஜ் பேசும்போது “டைரக்டர், தயாரிப்பாளர் தொல்லையால் அர்த்தனா அழுததாக சர்ச்சை கிளம்பலாம். நாங்கள் காரணம் இல்லை. படப்பிடிப்பில் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. திருமணத்துக்கு பெண்பார்க்க செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் நகைச்சுவையாக படமாக்கி உள்ளோம்” என்றார்.

பின்னர் மேடையில் அழுத காரணம் குறித்து நடிகை அர்த்தனா கூறியதாவது:-

“படப்பிடிப்பில் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சிவசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும் நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். ஏற்கனவே தொண்டன் படத்தில் நடித்துள்ளேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்”

இவ்வாறு அர்த்தனா கூறினார்.