கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்வதா? நடிகர் விஷால் கண்டனம்

கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்வதா? நடிகர் விஷால் கண்டனம்

Update: 2018-05-23 22:15 GMT
கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்ததற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்தார்.

விஷால் கண்டனம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு கொடூரமானது. இதில் 12 பேர் இறந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே அதை மூடுங்கள் என்று கோரிக்கை விடுத்தே மக்கள் போராடினார்கள். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். அந்த தொகுதியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

முட்டுக்கு கீழே

சுடுவதற்கு எஸ்.எல்.ஆர் துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளனர். அதை பயன்படுத்த தடை உள்ளது. போராட்டக்காரர்கள் மீது முட்டுக்கு கீழேதான் சுட வேண்டும் என்பதையும் மீறி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் அமைதியாக போராட்டம் நடத்தி உள்ள மக்கள் 100-வது நாளில் எப்படி வன்முறையில் ஈடுபடுவார்கள்.

ஆலையை மூடினால்தான் பலியானவர்கள் ஆன்மா சாந்தி அடையும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு, அரசு வேலை என்பதுடன் இந்த பிரச்சினைக்கான தீர்வையும் சொல்ல வேண்டும். ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து ஓட்டுப்போட்டால் ஏற்பீர்கள். கோரிக்கை வைத்தால் சுடுவீர்களா? ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறவர்களை நேரில் சென்று பார்த்த நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்தது என்ன நியாயம். இதனை கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவி செய்வது? நாடு எங்கே போகிறது என்று தெரியவில்லை. அடுத்து என் மீதும் வழக்கு பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு விஷால் கூறினார்.

மேலும் செய்திகள்