சினிமா செய்திகள்
நடிகை கஜோலுக்கு மெழுகு சிலை

நடிகை கஜோலுக்கு மெழுகு சிலை
துறுதுறு நடிப்பாலும் சிரிப்பாலும் பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் கஜோல். தமிழில் மின்சார கனவு படத்தில் ‘பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை பூவிரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை’ பாடலுக்கு அவர் ஆடிய நடனத்தில் விழாத இளைஞர்கள் இல்லை. சமீபத்தில் வந்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் தனுசுடன் நடித்து திறமையை மீண்டும் நிரூபித்தார்.

இந்தியில் கஜோல் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்தன. ஷாருக்கானுடன் கஜோல் நடித்த ‘தில்வாலே துல்கனியா லேஜாயேகே’ படம் 1109 வாரங்கள் தியேட்டர்களில் தொடர்ந்து ஓடி இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியது. மேலும் அவர் நடித்த பல இந்தி படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. 1999-ல் பிரபல இந்தி நடிகர் அஜய்தேவ்கானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் நைசா சிங்கப்பூரில் படிக்கிறார்.

கஜோலின் திரையுல சாதனைகளை கவுரவித்து சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் அவருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை திறந்து வைக்க கஜோலை அழைத்து இருந்தனர். அவரும் அங்கு படித்து வரும் மகள் நைசாவுடன் சென்றார். இருவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

தனது மெழுகு சிலையை திறந்து வைத்து அதன் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டார் கஜோல். எனக்கு மெழுகு சிலை வைத்து இருப்பது பெருமையாக உள்ளது. மகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கஜோல் கூறினார்.