சினிமா செய்திகள்
ரஜினியுடன் இணைகிறார் பாபி சிம்ஹா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி ஆகியோர் இணைகிறார்கள். #Rajinikanth
சென்னை,

ரஜினியின் நடிப்பில் 'காலா' , '2.0' என இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. இதில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' படம், ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது காலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலா படத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், அஞ்சலி பாட்டீல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் .

இதில் சிம்ரன் முதன் முறையாக ரஜினியுடன் நடிக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூன் 4-ம் தேதி டேராடூனில் தொடங்க இருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட 200 பேர் கொண்ட குழு ஜூன் 1-ம் தேதியே டேராடூன் புறப்பட்டுச் செல்கிறது. இந்தப் படத்தில், ரஜினியுடன் பாபி சிம்ஹா, ‘ஜில் ஜங் ஜக்’புகழ் சனந்த் ரெட்டி ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இவர்கள் ரஜினியின் மகன்களாக நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பாபி சிம்ஹாவுக்கு கிடைத்தது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'மெர்க்குரி' படத்தில் நடித்தவர்தான் சனந்த் ரெட்டி. இந்த திரைப்படம் ஒரு அரசியல் திரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பதின் மூலம் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்-உடன் அனிருத் முதல் முறையாக இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.