சினிமா செய்திகள்
பணம் எடுத்து விட்டு திரும்பி வராத மகனுக்காக ஒரு வருடம் காத்திருந்து உயிரிழந்த இந்தி நடிகை

பணம் எடுத்து வருகிறேன் என கூறி விட்டு திரும்பி வராத மகனுக்காக ஒரு வருடம் காத்திருந்த இந்தி நடிகை கீதா கபூர் முதியோர் இல்லத்தில் இன்று மரணம் அடைந்துள்ளார்.
மும்பை,இந்தி திரையுலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை கீதா கபூர் (வயது 57).  இவரது மகன் ராஜா நடன கலைஞராக இருக்கிறார்.  கீதாவின் மகள் விமான பணிப்பெண்ணாக உள்ளார்.கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரலில் கீதாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.  இதனால் கடந்த வருடம் மும்பை புறநகரில் உள்ள எஸ்.ஆர்.வி. மருத்துவமனைக்கு அவரை ராஜா கொண்டு சென்று சேர்த்துள்ளார்.அதன்பின்னர் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்து வருகிறேன் என கூறி விட்டு சென்றுள்ளார்.  ஆனால் அவர் திரும்பி வரவேயில்லை.இந்த நிலையில், தனது மகன் திரும்பி வருவான் என ஒரு வருடம் காத்திருந்த இந்தி நடிகை கீதா கபூர் முதியோர் இல்லத்தில் மரணம் அடைந்துள்ளார்.இதனை இந்தி பட தயாரிப்பாளரான அசோக் பண்டிட் உறுதி செய்துள்ளார்.  இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கீதாவின் உடலருகே நிற்கிறேன்.  அவரை ஆரோக்கியமுடன் வைத்திருக்க முயற்சிகளை மேற்கொண்டோம்.  ஆனால் தனது மகன் மற்றும் மகளுக்காக காத்திருந்தது அவரை நாளுக்கு நாள் பலவீனமடைய செய்தது என்று தெரிவித்துள்ளார்.