சினிமா செய்திகள்
‘காலா’ படத்தில் துணிச்சல் மிகுந்த பெண்ணாக ஹூமா குரோஷி

‘கபாலி’ படத்தை அடுத்து ரஜினிகாந்த், ‘காலா’ படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.
‘கபாலி’ படத்தை அடுத்து ரஜினிகாந்த், ‘காலா’ படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ‘கபாலி’ படத்தை டைரக்டு செய்த பா.ரஞ்சித்தே இந்த படத்தையும் டைரக்டு செய்து இருக்கிறார். இதில், கதாநாயகியாக நடித்து இருப்பவர், பிரபல இந்தி நடிகை ஹூமா குரோஷி. இவர், துணிச்சல் மிகுந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர், ‘ஸரீனா.’ இவருடைய ‘போஸ்டர்’ நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக ஹூமா குரோஷி தனது டுவிட்டரில், “இந்த வாய்ப்பை வழங்கியதற்காகவும், நிலைத்து வாழும் கதாபாத்திரத்தை கொடுத்ததற்காகவும் ரஞ்சித்துக்கும், ரஜினிகாந்துக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்-ஹூமா குரோஷி ஜோடியுடன் ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, இந்தி நடிகர் நானாபடேகர், அஞ்சலி பட்டீல், திலீபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். படத்தில், 8 பாடல்கள் உள்ளன. முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.

‘காலா’ படத்தில், ரஜினிகாந்த் ஒரு தாதாவாக நடித்து இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. இதையடுத்து, சென்னையில் பிரமாண்டமான அரங்கு அமைத்து, சில முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் பிரமாண்டமான முறையில் நடந்தது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் திரைக்கு வரும் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. தற்போது, அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.