சினிமா செய்திகள்
மலாலா வாழ்க்கை படமாகிறது

பாகிஸ்தானை சேர்ந்த மலாலா பள்ளியில் படித்தபோது பெண்கல்வியை வலியுறுத்தி பேசி வந்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த மலாலா பள்ளியில் படித்தபோது பெண்கல்வியை வலியுறுத்தி பேசி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் 2012-ம் ஆண்டு பள்ளியில் இருந்து பஸ்சில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த மலாலா மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த மலாலாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்தார். 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. இளம் வயதில் இந்த பரிசை பெற்றவர் மலாலா.

தற்போது மலாலாவின் வாழ்க்கை ‘குல் மக்காய்’ என்ற பெயரில் சினிமா படமாகிறது. தனது 11 வது வயதில் இந்த பெயரில்தான் பெண்கல்வியை வலியுறுத்தி தனது வலைத்தளத்தில் அவர் எழுதி வந்தார். அதையே படத்துக்கு பெயராக வைத்துள்ளனர். இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் தயாராகிறது. அம்ஜத்கான் இயக்குகிறார்.

மலாலாவாக ரீம்சேக் நடிக்கிறார். அதுல் குல்கர்னி, முகேஷ் ரிஷி, திவ்யா தத்தா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். “மலாலாவின் வீடு, படித்த பள்ளி ஆகியவற்றை அரங்குகளாக அமைத்து படமாக்குகிறோம். பெரும் பகுதி படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. 16 கேமராக்கள் வைத்து படப்பிடிப்பு நடக்கிறது. படத்தின் முதல் நாள் வசூல் மலாலாவின் அறக்கட்டளை நிதிக்கு வழங்கப்படும்” என்றார் இயக்குனர் அம்ஜத்கான்.