ஆந்திராவில் சாவித்திரி படத்துக்கு வரிவிலக்கு

சாவித்திரி வாழ்க்கையை தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் படமாக்கி திரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Update: 2018-05-27 23:00 GMT
தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்த சாவித்திரி வாழ்க்கையை தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் படமாக்கி திரைக்கு கொண்டு வந்துள்ளனர். இருமாநிலங்களிலும் படத்துக்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளது. சாவித்திரியாக கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.

சாவித்திரி படக்குழுவினரை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

“சாவித்திரி வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்து இருந்தனர். அவர் பட்ட கஷ்டங்களை காட்டினார்கள். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருந்தார். இதுமாதிரியான கதைகள் அரிதாகத்தான் வருகின்றன. சாவித்திரி காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ் ஆகிய நடிகர்களுக்கு மட்டுமே நட்சத்திர அந்தஸ்து இருந்தது.

அவர்களுக்கு இணையாக சாவித்திரியையும் மதித்தனர். இந்த படத்தில் நடிகைகளுக்கு தேவையான ஒரு தகவலையும் சொல்லி இருந்தனர். படக்குழுவினரை பாராட்டுகிறேன். சாவித்திரி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்கிறது.”

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, “சாவித்திரியாக நடித்ததை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

படக்குழு சார்பில் சந்திரபாபு நாயுடுவிடம் அமராவதி வளர்ச்சிக்காக ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்