சினிமா செய்திகள்
அரசியல் கதை? புதிய படத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த்

காலா வருகிற 7-ந் தேதி திரைக்கு வருகிறது. ஆகஸ்டு மாதம் 2.0 வெளியாகும் என்று தெரிகிறது.
ரஜினிகாந்த் அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணியில் ஒரு பக்கம் ஈடுபட்டு வந்தாலும் இன்னொரு புறம் புதிய படத்தில் நடிக்கவும் தயாராகி இருக்கிறார். ஏற்கனவே ரூ.450 கோடி செலவில் தயாரான 2.0 மற்றும் காலா என்று இரண்டு படங்களை முடித்துள்ளார்.

காலா வருகிற 7-ந் தேதி திரைக்கு வருகிறது. ஆகஸ்டு மாதம் 2.0 வெளியாகும் என்று தெரிகிறது. அடுத்து அவரது புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். படத்தின் முழு கதை மற்றும் திரைக்கதை ரஜினிகாந்திடம் சொல்லப்பட்டதாகவும் அதில் திருப்தி அடைந்து அவர் படப்பிடிப்புக்கு கிளம்பலாம் என்று கூறியதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே படத்தில் நடிக்கும் பிற நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்தது. கதாநாயகி வாய்ப்பு கேட்டு முன்னணி இளம் கதாநாயகிகள் மோதினர். ஆனால் ரஜினிகாந்த் தனக்கு பொருத்தமான 40 வயதுள்ள நடிகையை பார்க்கும்படி சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இளம் நடிகைகள் ஜோடியாக நடிப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை என்று சென்னையில் நடந்த காலா பட விழாவில் அவர் தெளிவுபடுத்தி இருந்தார்.

சிம்ரன் உள்பட பல நடிகைகள் பெயர் அடிபடுகிறது. விஜய் சேதுபதி இதில் நடிக்கிறார். பாபி சிம்ஹாவும் சேர்ந்து இருக்கிறார். அடுத்த வாரம் இறுதியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் அரசியல் சம்பந்தமான கதை என்கின்றனர். இந்த படத்தை முடித்து விட்டு கட்சி பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.