கர்நாடகத்தில் தடையால் ‘காலா’ படத்துக்கு ரூ.20 கோடி இழப்பு?

ரஜினிகாந்தின் ‘காலா’ படம் உலகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி ரிலீசாகிறது.

Update: 2018-05-30 22:45 GMT
ரஜினிகாந்தின் ‘காலா’ படம் உலகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி ரிலீசாகிறது. தமிழ் நாட்டில் அதிக தியேட்டர்களில் திரையிடுவதால் சிறுபட்ஜெட் படங்கள் வெளியீட்டு தேதிகளை தள்ளி வைத்துள்ளன. சில படங்களை முன்கூட்டி இந்த வாரமே வெளியிடுகிறார்கள்.

ரஜினிகாந்த் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே அங்கும் சுமார் 250 தியேட்டர்களில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முன்வந்தனர்.

ஆனால் காவிரி பிரிச்சினையில் ரஜினிகாந்த் சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ‘காலா’வை திரையிட தடை விதித்துள்ளனர். காலா படத்தை திரையிடக் கூடாது என்று 10 கன்னட அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் காலா படத்தை கர்நாடகத்தில் திரையிட மாட்டோம் என்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் கோவிந்து அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே குசேலன் படம் வெளியானபோதும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட பிரச்சினையில் கர்காடகத்துக்கு எதிராக ரஜினி பேசியதை காரணமாக சொல்லி அந்த படத்தை நிறுத்தினர். அதன் பிறகு அவர் வருத்தம் தெரிவித்த பின்னரே படம் வெளியாக அனுமதித்தனர்.

பாகுபலி படம் வெளியானபோதும் சத்யராஜை கண்டித்து படத்துக்கு தடை போட்டனர். பின்னர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்து படம் வெளிவர செய்தார். இப்போது காலா பிரச்சினையிலும் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிப்பார் என்று கன்னட அமைப்புகள் எதிர்பார்க்கின்றன. கர்நாடகத்தில் காலா படம் ரூ.20 கோடி வரை வசூலிக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். தடை காரணமாக அந்த தொகையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்