சினிமா செய்திகள்
மலையாள பட உலகில் என்னை ஒதுக்குகிறார்கள் -நடிகை ரம்யா நம்பீசன் வருத்தம்

புதுமுகங்களுக்கே வாய்ப்பு வழங்குவதால் மலையாள பட உலகில் என்னை ஒதுக்குகிறார்கள் என நடிகை ரம்யா நம்பீசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின்னர் கதாநாயகியான ரம்யா நம்பீசனுக்கு பீட்சா படம் மூலம் தமிழில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. ராமன் தேடிய சீதை, குள்ளநரி கூட்டம், சேதுபதி, சத்யா என்று வித்தியாசமான படங்கள் அமைந்தன. மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்தார். பாடகியாகவும் திறமை காட்டினார்.

சமீபகாலமாக மலையாளத்தில் அவருக்கு படங்கள் இல்லை. புதுமுக நடிகைகளுக்கே அங்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. 90 சதவீதம் புதுமுகங்களைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்கின்றனர். இப்போது தயாரிப்பில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட புதிய படங்களுக்கு புதுமுக நடிகைகள்தான் கதாநாயகியாக நடிக்கிறார்கள். மூத்த நடிகைகளை ஓரங்கட்டி விட்டார்கள்.

இதனால் ரம்யா நம்பீசன் வருத்தத்தில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“மலையாளத்தில் 2015-ல் வெளியான சைகல் படுகயனு நான் நடித்த கடைசி படம். அதன் பிறகு நல்ல பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. நிறைய நடிகைகள் படங்கள் இல்லாமல் திரைப்படத்துறையை விட்டு விலகி இருக்கிறார்கள்.

நடிகர்களுக்கு மட்டும் படங்கள் வருகிறது. என்னால் சினிமாவை விட்டு ஒதுங்க முடியாது. எனக்கு தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால் மலையாளத்தில் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்குகிறார்கள்.” இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.