காவிரியை விட ’காலா’ முக்கியமல்ல - கமல்ஹாசன்

காவிரியை விட ’காலா’ முக்கியமல்ல ரஜினிகாந்துக்கு எதிராக கமல்ஹாசன். #kaala #KamalHassan #Rajinikanth

Update: 2018-06-04 09:34 GMT
சென்னை

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்காக வரைவு திட்டம் உருவாக்கப்பட்டு அது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியாகியது.

இந்நிலையில், காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு சென்றார். இதையடுத்து, இன்று காலை அவர் குமாரசாமியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திலை வைத்து நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கமல் கூறியதாவது,

"நான் மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளேன். நாங்கள் காவிரி உட்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம். இது கூட்டணிக்கான சந்திப்பு கிடையாது. குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது. அதனால், தண்ணீர் திறக்க நினைவூட்ட வந்துள்ளேன்.

காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. என்னை கேட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம்" என்றார்.

அப்போது குமாரசாமி கூறியதாவது:-

"இருமாநிலங்களிலும் விவசாயிகள் இருக்கிறார்கள். அதனால், இருமாநில விவசாயிகளையும் பாதிக்காதவாறு தமிழக அரசுடன் பேச்சு நடத்தி  முடிவு எடுக்கப்படும்" என்றார்.


மேலும் செய்திகள்