சினிமா செய்திகள்
பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகை சுவேதா பாசு நிச்சயதார்த்தம் இந்தி டைரக்டரை மணக்கிறார்

சந்தமாமா, ராரா தமிழ் படங்களில் நடித்துள்ள சுவேதா பாசு தெலுங்கு, இந்தி பட உலகிலும் பிரபலமானவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தெலுங்கில் கதாநாயகியாகி பின்னர் தமிழுக்கு வந்தார்.
2014-ம் ஆண்டு சுவேதா பாசு பாலியல் சர்ச்சையில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. அதில் இருந்து மீள பல மாதங்கள் ஆனது. இப்போது இந்தி படமொன்றில் நடித்துள்ளார். ‘கேங்க்ஸ்டர்’ என்ற வெப் தொடரிலும் நடித்து இருக்கிறார். சுவேதா பாசுவுக்கு தற்போது இந்தி டைரக்டர் ரோஹித் மிட்டலுடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது.
இதுகுறித்து சுவேதா பாசுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.

“எனக்கு டைரக்டர் ரோஹித் மிட்டலுடன் திருமணம் நிச்சயமாகி இருப்பது உண்மைதான். பொதுவாக ஆண்கள்தான் பெண்களிடம் காதலை சொல்வார்கள். ஆனால் நான் கோவாவில் வைத்து ரோஹித் மிட்டலிடம் எனது காதலை சொன்னேன். அவர் புனேயில் வைத்து அந்த காதலை ஏற்றுக்கொண்டார்.

எங்கள் காதலுக்கு இரு வீட்டு குடும்பத்தினரும் சம்மதித்தனர். உடனே நிச்சயதார்த்தம் முடிந்தது. திருமணத்துக்கு நாங்கள் அவசரப்படவில்லை. எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட பழைய விஷயங்களை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.” இவ்வாறு சுவேதா பாசு கூறினார்.