சினிமா செய்திகள்
கமல்ஹாசனுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம்

நடிகர் கமல்ஹாசன் கர்நாடகாவுக்கு சென்று முதல்-அமைச்சர் குமாரசாமியை சந்தித்தார். அப்போது காலா படத்துக்கு கர்நாடகாவில் தடைவிதித்தது குறித்து அவர் பேசாதது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதற்கு பதில் அளித்த கமல் ‘காலாவை விட, காவிரி முக்கியம்’ என்றார். இதற்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“கர்நாடக முதல்வரிடம் காலா படம் குறித்து கமல்ஹாசன் பேசாதது தவறு. விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது அதை கமல்ஹாசன் பெரிதுபடுத்தினார். உலகமே அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதுபோல அவரது பேச்சுக்கள் இருந்தன. ஆனால் காலா படத்துக்கு இப்போது அவர் குரல் கொடுக்காமல் இருக்கிறார்.

நான் காலா படத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். எல்லா படங்களுக்காகவும் பேசுவது எனது கடமை. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா, ம.ஜ.த என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். சமூக விரோதிகளின் செயலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. படத்தை வெளியிடக்கூடாது என்று தடுப்பது தவறு. பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.” இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.