டிக்கெட் முன் பதிவுகள் தொடங்கின காலா படத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அதையும் மீறி டிக்கெட் முன்பதிவுகள் ஜரூராக தொடங்கி உள்ளன.

Update: 2018-06-05 23:38 GMT
இந்த படத்தை ஆரம்பித்தபோது ஹாஜி மஸ்தான், திரவியம் நாடார் கதை என்றெல்லாம் சர்ச்சைகள் கிளம்பின. திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்கு பக்கபலமாக நின்ற ஒரு தாதாவின் கற்பனை கதை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்தனர்.

படத்தை வெளியிடும் தேதிகள் பல்வேறு காரணங்களால் இரண்டு முறை தள்ளிப்போய் நாளை (7-ந் தேதி) படம் திரைக்கு வரும் சூழ்நிலையில் மீண்டும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. தமிழகம் முழுவதும் 600 திரையரங்குகளுக்கு மேல் காலாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதிக தியேட்டர்களில் வெளியிடுவதை சிலர் கண்டித்துள்ளனர்.

கர்நாடகாவில் காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த் சொன்ன கருத்தை வைத்து மாநிலம் முழுவதும் ‘காலா’ படத்துக்கு தடை விதித்து விட்டனர். அங்கு 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா வெளியாக இருந்தது. இதன்மூலம் ரூ.20 கோடி வரை வசூலை எதிர்பார்த்தனர். தடை காரணமாக அந்த தொகையை இழக்கும் நிலை வந்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ரஜினி சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நார்வேயில் காலா படத்தை திரையிட மாட்டோம் என்று அங்குள்ள தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் குழு அறிவித்து உள்ளது. சுவிட்சர்லாந்திலும் காலாவுக்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது மறைந்த மும்பை தொழில் அதிபர் திரவியம் நாடார் மகன் டி.ஜவகர் காலா படத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். “காலா படம் எனது தந்தையின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதை. அவரது வரலாறு படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. எனவே கோர்ட்டுக்கு சென்று படத்துக்கு தடை வாங்குவோம்” என்று கூறியுள்ளார்.

தொடர் எதிர்ப்புகளால் காலா படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். அதையும் மீறி காலா படத்துக்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன.

மேலும் செய்திகள்