130 தியேட்டர்களில் திரையிட திட்டம் கர்நாடகாவில் ‘காலா’ படம் இன்று வெளியாகுமா?

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் இன்று திரைக்கு வருகிறது. கர்நாடகத்தில் மட்டும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பினால் காலா வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது.

Update: 2018-06-06 21:30 GMT
ஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் இன்று திரைக்கு வருகிறது. கர்நாடகத்தில் மட்டும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பினால் காலா வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது. கர்நாடகாவில் தமிழ் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. கன்னட நடிகர்கள் படங்களை விட தமிழ் படங்கள் அதிக வசூல் பார்க்கின்றன.

இதனால் கன்னட அமைப்புகளும், அங்குள்ள திரைப்பட சங்கங்களும் தமிழ் படங்களுக்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி விட்டது. ஒகேனக்கல் பிரச்சினையின்போது ரஜினிகாந்த் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது குசேலன் படத்தை நிறுத்தினர். பாகுபலி-2 வெளியானபோது அதில் நடித்த சத்யராஜை காவிரி பிரச்சினை குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி நிர்ப்பந்தம் செய்தனர்.

இப்போது காலா படமும் அதே சர்ச்சையில் சிக்கி உள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும், கன்னட அமைப்புகளுக்கு துணையாக நிற்கிறது. ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என்று கூறினால் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கூறுகின்றனர். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் காலா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

ஆனாலும் முதல்-அமைச்சர் குமாரசாமி காலாவுக்கு எதிராகவே பேசி உள்ளார். “கோர்ட்டு உத்தரவை அரசு பின்பற்றும். ஆனாலும் காலா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வர மக்கள் அச்சப்படும் நிலையில் அந்த படத்தை திரையிடுவதில் அர்த்தம் இல்லை. தற்போதையை சூழ்நிலையில் படத்தை வெளியிடாமல் இருப்பதே சிறந்தது” என்று கூறினார்.

தியேட்டர் அதிபர்கள் வன்முறை நடக்கலாம் என்று பயந்து காலா படத்தை திரையிட தயக்கம் காட்டுகிறார்கள். ஆனாலும் பெங்களூருவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வைத்துள்ள மும்பையை சேர்ந்தவர்கள் காலா படத்தை எதிர்ப்பை மீறி திரையிட முடிவு செய்துள்ளனர்.

கர்நாடகத்தை சேர்ந்த வினியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ் காலா படத்தின் வினியோக உரிமையை வாங்கி இருக்கிறார். அவரும் கர்நாடகத்தில் 130 தியேட்டர்களில் காலா படம் திரையிடப்படும் என்று அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்