சவுதியில் வெளியான முதல் இந்திய படம் ரஜினியின் ‘காலா’ படம் சாதனை

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் உலக அளவில் நேற்று வெளியாகி புதிய சாதனைகள் நிகழ்த்தி உள்ளது.

Update: 2018-06-08 00:00 GMT
சென்னை,

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, நானாபடேகர் ஆகியோர் நடித்துள்ள காலா படம் உலகம் முழுவதும் 1,700-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. தமிழ் நாட்டில் 500-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் உற்சாகத்தோடு தியேட்டர்களில் திரண்டு படம் பார்த்தனர்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் கொடி தோரணங்களால் விழாக்கோலம் பூண்டு இருந்தது. மும்பை நகரையும் காலா ஜுரம் தாக்கியது. படத்தில் ரஜினி அணிந்திருந்த கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்தும் முதுகில் ரஜினியின் உருவப்படம் வரைந்தும் ரசிகர்கள் படம் பார்க்க வந்தனர்.

படத்தை பார்த்து விட்டு ரஜினியின் நடிப்பு பற்றி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டனர். ஏற்கனவே பில்லா, பாட்ஷா, தளபதி என்று தாதா கதைகளில் ரஜினி நடித்துள்ளார். அந்த வரிசையில் காலாவும் தாதா படமாக வந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை காணமுடிந்தது.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

ஜப்பானில் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே அவரது முத்து உள்ளிட்ட பல படங்கள் ஜப்பானில் அதிக நாட்கள் ஓடின. அங்கு ரஜினிக்கு ஜப்பானியர்கள் ரசிகர் மன்றமும் தொடங்கி உள்ளனர்.

ஜப்பான் ரசிகர்கள் காலா படம் பார்க்க குடும்பத்தோடு இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்து தங்கி இருந்தனர். அவர்கள் கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி தியேட்டரிலும், ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள காசி தியேட்டரிலும் ஒரே நாளில் இரண்டு காட்சிகளை பார்த்து ரசித்தனர்.

ஜப்பானை சேர்ந்த ஏசுதா என்பவர் கூறும்போது, “ரஜினியை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் காலா படத்தை பார்க்க சென்னை வந்தோம். படம் எங்களுக்கு பிடித்தது” என்றார்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோயம்பேட்டில் உள்ள தியேட்டரில் காலா படத்தை பார்த்து விட்டு “சமூக கருத்துள்ள படம் காலா என்றதால் படம் பார்க்க வந்தேன். படத்துக்கு மதிப்பெண் கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. திரைப்படங்களை அரசியலுடன் இணைத்து பார்க்க கூடாது” என்றார்.

முதல் இந்திய படம்

சவுதி அரோபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை காலா பெற்றுள்ளது. அந்த நாட்டில் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனால் புதிய தியேட்டர்கள் கட்டப்பட்டு சமீபத்தில் பிளாக் பேந்தர் என்ற ஹாலிவுட் படம் வெளியிடப்பட்டது. அதன்பிறகு இப்போது காலாவை அங்கு திரையிட்டனர்.

இது காலாவுக்கு கிடைத்த பெருமையாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவிலும் காலா படம் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது.

மகிழ்ச்சியாக உள்ளது

சென்னையில் காலா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு டைரக்டர் பா.ரஞ்சித் நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“நான் ரஜினிகாந்தை வைத்து ஏற்கனவே கபாலி படத்தை எடுத்தேன். இப்போது காலாவை இயக்கி உள்ளேன். இந்த படத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகளை சொல்லி இருக்கிறேன். காலா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

ரஜினிகாந்தின் அரசியலுக்காக இந்த படத்தை எடுக்கவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக எடுக்கப்பட்ட படம். கர்நாடகத்தில் சில இடங்களில் காலா வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது.”

இவ்வாறு ரஞ்சித் கூறினார். 

மேலும் செய்திகள்