சினிமா செய்திகள்
நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலா

‘சஞ்சு’ என்ற படத்தில் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளார்.
புகழ்பெற்ற இந்தி நடிகை நர்கீஸ். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து 1940 மற்றும் 50-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். முதன் முதலில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படமான ‘மதர் இந்தியா’வில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. நடிகர் சுனில்தத்தை மணந்து திருமணத்துக்கு பிறகு நடித்து வெளிவந்த ‘ராத் அவுர் தின்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். 1981-ல் மரணம் அடைந்தார்.

மத்திய அரசு நர்கீசுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது, சுனில்தத்-நர்கீஸ் தம்பதியின் மகனும் நடிகருமான சஞ்சய்தத் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி சிறையில் இருந்த சம்பவங்களையும் இதில் காட்சிபடுத்துகின்றனர். இதில் சஞ்சய்தத் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர். ‘சஞ்சு’ என்று படத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.

இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மனிஷா கொய்ராலாவின் தோற்றம் நர்கீஸ் மாதிரியே இருப்பதாக இந்தி பட உலகினர் பாராட்டுகின்றனர். சஞ்சய்தத்தாக நடித்த ரன்பீர்கபூர் சிறையில் படும் அவஸ்தைகளும் டிரெய்லரில் இருந்தன. சஞ்சு படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.

பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்திருந்த மனிஷா கொய்ராலாவுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தார். சஞ்சு படம் மூலம் சினிமாவில் இன்னொரு ரவுண்டுக்கு தயாராகிறார்.