சினிமாவில் கொடூர வில்லன்... நிஜத்தில் உருகவைக்கும் ஹீரா... யார் இந்த நானா பட்டேக்கர் !!

சினிமாவில் கொடூர வில்லனா இருக்கும் நானா பட்டேக்கர் நிஜத்தில் ஒரு உருகவைக்கும் ஹீராவாக உள்ளார். #NanaPattacher

Update: 2018-06-09 10:59 GMT
சினிமாவில் கொடூர வில்லனாக நடிப்பவர்கள்  எல்லாம் நிஜத்தில்  ஆன்மீகவாதிகளாகவும், சமூக சீர்திருத்த வாதிகளாகவும் இருப்பார்கள் அதற்கு உதாரணமாக தமிழில் மறைந்த நடிகர் நம்பியார், தற்போதைய நடிகர் பிரகாஷ்ராஜ், தற்போது நமக்கு தெரிந்து  இருப்பவர் ரஜினிகாந்தின் திரைப்பட வில்லன் நானா பட்டேக்கர்.

'காலா' திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பவர் நானா பட்டேக்கர். இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனர், பாடகர், என பல்வேறு திறமைகளை கொண்டவர். இவர் ஏற்கனவே தமிழில்  பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான 'பொம்மலாட்டம்' திரைப்படத்தில் கோபக்கார இயக்குனராக நடித்திருப்பார். இப்படி பொம்மலாட்டம் படத்தில் சைலன்டாக நுழைந்து, வெயிட்டான வில்லன் என்று 'காலா' படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நானா பட்டேக்கர்.

நானா பட்டேக்கரின் முழுப்பெயர் விஷ்வநாத் பட்டேக்கர். இவர் மகாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் மும்பையில் இருக்கும் சர்.ஜே.ஜே. இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்லைட் ஆட்ஸ் கல்லூரியில் படித்தார்.

இவருடைய முதல் திரைப்படம் 'கமான்'. பாலிவுட் திரைப்படமான இது 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் இவருக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது 'பரிந்தா' என்கிற திரைப்படம் தான்.

இவர் பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இன்றி பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மராத்தி மொழியில் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் 'கிரந்த்வீர்' என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காக 1995 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் 1990 ஆம் ஆண்டு நடித்த 'பரிந்தா' மற்றும் 1997 ஆம் ஆண்டு வெளியான 'அக்னி சாக்ஷி' ஆகிய படங்கள் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

இவர் 'பிரகார்' என்ற படத்தை இயக்கி, நடித்திருந்தார். தனது திரைக்கதை என்பதாலும், இயக்குனராக தடம் பதிக்கும் முதல் படம் என்பதாலும், அதில் சிறப்பாக நடிக்க பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்தார். அதில் ஒன்று தான் ராணுவ பயிற்சி. இந்திய ராணுவத்தில் 3 வருட பயிற்சி எடுத்துக்கொண்டார். அதனால் திரைப்படத்தில் உயிரோட்டமாக நடித்ததுடன் ராணுவத்தில் கவுரவ கேப்டன் பொறுப்பையும் தக்கவைத்துக்கொண்டார்.

நானாவிற்கு சமைப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால் தன்னுடைய நண்பர்களுக்கு அடிக்கடி சமையல் விருந்து வைப்பார். சில சமயங்களில் தன் கையால் ஊட்டியும் விடுவாராம். இவர் சிறந்த துப்பாக்கி சுடும் வீரரும் கூட. அதனால் ஜி.வி. மவ்லாங்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க தகுதிப்பெற்றார்.

திரைப்படங்களில் ஒப்பந்தமாகி, பாதி நடித்த நிலையில் திடீரென அந்த படத்திலிருந்து வெளியேறுவது நானாவிற்கு பழக்கப்பட்ட ஒன்றாகும். ஏனெனில் தான் நடிக்கும் கதாப்பாத்திரத்திற்கு மதிப்பு குறைந்தாலோ, பாதியில் திரைக்கதை மாற்றப்பட்டாலோ அதிலிருந்து உடனடியாக வெளியேறி விடுவார். இதனால் இயக்குனர்கள் இவரிடம் முழு கதையும் முன்பே கூறி விடுவார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய மனதிற்கு நிறைவான கதைகளை மட்டுமே நானா தேர்வு செய்து நடிப்பாராம். ஒரு வருடத்திற்கு மட்டும் இவர் ஓரம் கட்டுவது 40 படங்களுக்கு மிகாமல் இருக்கும் என கூறப்படுகிறது.

இன்று பல நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை கோடிகளில் நிர்ணயித்திருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்திறக்கும் பிள்ளையார் சுழி போட்ட பெருமை நானாவையே சேரும். சல்மான் கான், ஷாருக்கான் போன்ற நடிகர்கள் சில லட்சங்களில் சம்பளம் வாங்கிய காலத்திலேயே கோடியில் சம்பளம் கேட்ட நடிகர் தான் நானா.

ஒரு அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் தான் வாழ்கிறார். இந்த வீடு அவருடைய அம்மாவுக்கு பிடிக்கும் என்பதும் ஒரு காரணம்.

நானா பட்டேக்கருக்கு ஒரு மகன் உள்ளார். அவரும் பாலிவுட் நடிகர் தான். தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த பின் தனிமையில் வாழும் இவருக்கு ஆதரவாக இருப்பது சமூக சேவை தான். சூட்டிங் நேரம் போக மீதமிருக்கும் நேரத்தை விவசாயிகளுடன் செலவழிக்கிறார். விவசாயிகளை சந்தோஷப்படுத்துவது என்றால் நானாவிற்கு மிகவும் பிடிக்கும். அதற்காக தன்னுடைய சொத்தில் பெரும் பகுதியை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன. ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தற்கொலை நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து ”நாம்” என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.

முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார். மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்‘ அறக்கட்டளை தற்போது இயங்கிவருகிறது. 

கணவரை இழந்த பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது. இளம் பெண்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. நானா படேகரை நிஜ ஹீரோ என்று புகழ்கின்றனர்

விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்த போது, 'தற்கொலை செய்யாமல் என்னிடம் வாருங்கள். நான் உதவுகிறேன்,  என்று விவசாயிகளை தேற்றிய பெருமை, நானாவையே சேரும். சொன்னதை போன்று செய்து காண்பித்தார். தற்போதும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்