சினிமா செய்திகள்
“அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்”நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்

காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால் என்கிறார் நடிகை சுபிக்‌ஷா.
அடுத்த வீட்டு பெண் போன்ற சாயல், சரளமாக தமிழ் பேசும் திறன், அழகான தோற்றம்...இவை மூன்றும் கலந்த அம்சமான அழகி, சுபிக்‌ஷா. ‘கடுகு’ படத்தில் அறிமுகமான இவர் தற்போது, ‘கோலி சோடா-2’ படத்தின் கதாநாயகியாக கலக்கியிருக்கிறார். ‘கோலி சோடா-2’ படக்குழுவினருடன் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“கடுகு படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் சிறியது. என்றாலும் எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் என்னை, ‘கடுகு சுபிக்‌ஷா’ என்று அழைத்தது, மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என்று நினைத்தேன். அந்த வாய்ப்பு உடனடியாக என் வீட்டு கதவை தட்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்று, ‘கோலி சோடா-2.’ இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர், இன்பவல்லி. பக்கத்து வீட்டு பெண் போன்ற ஜாலியான கதாபாத்திரம். அதே சமயம், அழுத்தமான காதல் காட்சிகளும் இருக்கிறது. இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது, ஒரு சவால்.

இயல்பாக நடித்தாலே போதும் என்று டைரக்டர் விஜய் மில்டன் கூறிவிட்டார். அவர் சொன்னபடி நடித்து இருக்கிறேன். கதாநாயகன் பரத் சீனி சண்டை காட்சிகளை விட, காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.”

இவ்வாறு நடிகை சுபிக்‌ஷா கூறினார்.