விஜய் பிறந்த நாளில், ‘டிராபிக் ராமசாமி’ வருவது பெருமையாக இருக்கிறது டைரக்டர் மகிழ்ச்சி

‘டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.

Update: 2018-06-09 23:26 GMT
சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘டிராபிக் ராமசாமி’ என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சமீபத்தில், டிராபிக் ராமசாமி படத்தை பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இது, படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி படத்தின் டைரக்டர் விக்கி கூறியதாவது:-

“வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ‘பிரிவியூ’ அரங்கில் பார்த்து விட்டு கைதட்டி பாராட்டுவது இதுவே முதல் முறை என்று கருதுகிறேன். இந்த பாராட்டு, சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்வுக்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.

தயாரிப்பாளர் சங்கம், இந்த பட வெளியீட்டு தேதியாக இம்மாதம் (ஜூன்) 22-ஐ கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில் உள்ளோம். “விஜய் அண்ணனுடைய ரசிகன் நான். அவரை அருகில் இருந்து அடிக்கடி பார்க்கலாம் என்பதற்காகவே டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.

அவர் தந்தையை வைத்து நான் இயக்கியுள்ள ‘டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது. இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன வேண்டும்?”

இவ்வாறு டைரக்டர் விக்கி கூறினார். 

மேலும் செய்திகள்