தனிமை என்பது தண்டனையல்ல.. தனியாக வாழும் பிரபலங்களின் ஜாலியான அனுபவங்கள்

‘தனிமையிலும் இனிமை காண முடியும்’ என்ற மன உறுதியோடு, திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Update: 2018-06-10 09:24 GMT
 ‘கல்யாணம் செய்துகொள்ளாமலே வாழ்கிறார்களே!’ என்ற சமூகத்தின் பரிதாப பார்வை அவர்கள் மீது விழுந்தாலும், அது அவர்களை பாதிப்பதில்லை. தனிமையிலே தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்வதாகவே அவர்களும் சொல்கிறார்கள். அப்படி சொல்லும் சில பிரபலங்களின் கருத்துக்கள்!

நடிகர் சல்மான்கான்:

“நான் தனியாக இருப்பதே எனக்கு நல்லது. அதுவே எனக்கு சுதந்திரத்தையும் தருகிறது. சமூகத்தில் பல பொறுப்புகளை சுமந்துகொண்டிருக்கும் எனக்கு இந்த தனிமை தேவைப்படுகிறது. சில சமயம், நான் திரு மணத்திற்கு ஒத்துவரமாட்டேன் என்றும் எனக்குத் தோன்றுகிறது. எல்லாமும் என் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறவன் நான். இந்த எண்ணம் திருமண வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பது எனக்குத் தெரியும். அது தவிர அடிக்கடி வரும் கோபம். சில நேரம் என்னாலேயே கோபத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அது பெரும் ஆபத்தில் போய் முடியும் என்று தெரிந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதனால் எனக்கு எதிரிகள் அதிகம். சமூகத்தில் யார் வேண்டுமானாலும் என்னை வெறுக்கலாம். ஆனால் நான் திருமணம் செய்துகொள்ளும் பெண் என்னை வெறுத்துவிடக்கூடாது. சில வேண்டாத சுபாவங்கள் என்னை கெட்டவனாக வெளியுலகத்திற்கு காட்டுகிறது. அதனால் நான் திருமணம் செய்துவிட்டு பின்பு வருந்தி எந்த பலனும் இருக்காது.

ஒரு திரைப்பட விழாவில் ரிஷிகபூர் மகனை அடித்துவிட்டேன். அது தவறு என்று பிறகு உணர்ந்தேன். அது பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. ரிஷிகபூர் என்னை போனில் அழைத்து பேசினார். அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டேன். `பீயிங் ஹ்யூமன் அமைப்பு எப்படி போய்க் கொண்டிருக்கிறது?’ என்று கேட்டார். நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னேன். ‘முதலில் நீ எப்படி மனிதனாக இருப்பது என்று கற்றுக்கொள்’ என்றார் கிண்டலாக. சில நேரங்களில் இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனி இதுபோல நடக்கக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொள்வேன். ஆனாலும் ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கல் ஏற்பட்டுவிடும்.

தனியாக இருப்பது ஒன்றும் உலக சாதனையல்ல. என் விருப்பப்படி என் வாழ்க்கையை வாழ முடிகிறது. வாழ்க்கையை ரசிக்கிறேன். போதுமானவரை உழைக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் உதவி செய்கிறேன். வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. என் உழைப்பு சமுதாயத்திற்கு போய் சேர வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு திருமணம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது.

இப்படி பல்வேறு வகையில் கணக்குப் போட்டுப்பார்த்துவிட்டு நான் தனியாக இருப்பதே நல்லது என்று தீர்மானித்து விட்டேன். இதை என் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டு விட்டனர். பத்திரிகையாளர்களும் இப்போதெல்லாம், எப்போது திரு மணம் என்ற கேள்வியை அதிகம் கேட்பதில்லை. தனியாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்.

நடிகர் ரித்திக்ரோஷன்:

தனிமை எனக்கு இனிமையானது. பெரும் போராட்டத்திற்கு பின்பு இந்த தனிமை எனக்கு கிடைத்திருக்கிறது. இது ஒருவகையான சுதந்திரம். நான் ஒரு கலைஞன். என்னால் எப்போதும் வீட்டை நினைத்துக் கொண்டிருக்க முடியாது. வெளியுலக செயல்பாடு களுக்கு வீட்டிற்கு வந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது. கலைஞர்கள் வெளியுலகில் வெற்றிகரமாக செயல்பட வீட்டில் உள்ளவர்கள் வழி வகுக்கவேண்டும். நீதிமன்றம் போல வீட்டில் எந்நேரமும் குற்றவாளி கூண்டில் நின்றுகொண்டு பதில் சொல்லிக்கொண்டிருக்க என்னால் முடியாது. அதனால்தான் என் மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன்.

என் மனைவியை நான் வெறுக்கவில்லை. என்னையும் அவள் வெறுக்கவில்லை. ஆனாலும் வாழ்க்கை இனிக்கவில்லை. ஏதோ ஒரு அசவுகரியம். அதைசொல்லத் தெரியவில்லை. விலகிவிட்டேன். இன்று நிம்மதியாக இருக்கிறது. ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றைப் பெற முடியும். இது உலக நியதி. இப்போது என் மனைவியை பார்க்கும் போது கோபம் வருவதில்லை. என்னைப் பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் தோன்றுவதில்லை. அவரவர் வழியில் அவரவர் தனித் தனியாக போய்க்கொண்டிருக்கிறோம். இந்த நிம்மதி தான் இருவருக்கும் தேவை. இதை புரிந்துகொள்ள இவ்வளவு காலமானது. தனிமை என்பது தண்டனையல்ல.

மேலும் செய்திகள்