இயக்குனர் அமீர், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்குப்பதிவு

இயக்குனர் அமீர், புதிய தலைமுறை தொலைக் காட்சி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-06-10 21:48 GMT
சென்னை,

கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று அரசியல் பிரபலங்கள் பேசினர். திரைப்பட இயக்குனர் அமீரும் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தார்.

இயக்குனர் அமீர் முன்வைத்த கருத்துகளுக்கு, நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்ற பா.ஜ.க.வினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இயக்குனர் அமீர் மீதும், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:-
புதிய தலைமுறை தொலைக்காட்சி வட்டமேஜை விவாதத்தை கோவையில் முறையாக நடத்தியது. தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் பங்கெடுத்து, அவரவர் கருத்துகளை கூறினார்கள். பா.ஜ.க.வும், தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களை விஷமிகள் என்றும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் போராட்டக்காரர்கள் தான் காரணம் என்றும் தவறான கருத்தைப் பதிவு செய்தது.

இயக்குநர் அமீர் ஒரு தமிழ் உணர்வாளர், தமிழீழ உணர்வாளர். அவர் எந்தக் கருத்தையும் சுதந்திரமாகச் சொல்லக்கூடியவர். ஆனால், அவர் சொல்லத் தொடங்குவதற்கு முன்னரே, பா.ஜ.க.வினரும், இந்து முன்னணியினரும் அவரைத் தாக்குவதற்காக மேடையை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்?.

புதிய தலைமுறை மீது வழக்குப்பதிந்ததை எதிர்த்து ஒட்டுமொத்தமாக அனைவரும் கண்டனம் தெரிவித்து, போராட வேண்டும். புதிய தலைமுறை மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் திரும்பப் பெற வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
புதிய தலைமுறை தொலைக் காட்சியின் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது ஏற்புடையதல்ல. பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கக்கூடாது, அடக்க நினைக்க முயற்சிக்கக்கூடாது.

எனவே, தமிழக அரசு புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
பா.ஜ.க.வினரின் கண்ணசைவுகளுக்கு ஏற்ப இயக்குநர் அமீர் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ள அ.தி.மு.க. அரசு, சுதந்திரமாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இது மிகவும் வேதனைக்குரியதாகும். அவர்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடன், வன்முறைக்கு வழிகோலும் வகையில் நடந்து கொண்ட பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:-
இதுமிக மோசமான, தவறான முன்னுதாரணமாகும். இத்தகைய போக்கை அனுமதித்தால் தமிழ்நாட்டில் எத்தகைய நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாத நிலை ஏற்படும். ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் அணுகுமுறையை மாநில அரசு கைவிட வேண்டும். புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் இயக்குனர் அமீர் மீதான வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதும் அமீர் போன்ற கலைஞர்கள் மீதும் தமிழக அரசு வழக்குகளைப் போட்டிருப்பது ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கின்ற எதேச்சதிகாரப் போக்காகும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கக் கூடிய அளவுக்கு அதீதமாகச் சென்றுள்ள நிலையை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அடித்தவனை விட்டுவிட்டு, அடிபட்டவன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கொடுஞ் செயலாகும். தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையே நிலவுகிறது.

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பி.ஜெயசீலன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்