சினிமா செய்திகள்
புகைப்படங்களை எரித்து போராட்டம் மன்னிப்பு கேட்ட பிரியங்கா சோப்ரா

‘தமிழன்’ படத்தில் விஜய் ஜோடியாக வந்து தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட பிரியங்கா சோப்ரா இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
 குவான்டிகோ டி.வி தொடர் மூலம் அமெரிக்காவில் பிரபலமாகி ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். உலக அளவில் அவருக்கு ரசிகர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் சமீபத்தில் ஒளிபரப்பான குவான்டிகோ தொடரில் இந்தியரை தீவிரவாதிபோல் சித்தரித்து காட்சி வைத்து இருந்தனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அவரது புகைப்படங்கள் எரிக்கப்பட்டன. சுவரொட்டிகளையும் கிழித்து எறிந்தார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தொடரை ஒளிபரப்பிய டி.வி நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. இப்போது பிரியங்கா சோப்ராவும் மன்னிப்பு கேட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “குவான்டிகோ தொடரால் சிலருடைய மனது புண்பட்டுள்ளதை அறிந்து வருத்தமுற்றேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம் இல்லை. நான் இந்தியன் என்பதை பெருமையாக நினைக்கிறேன். அதில் எப்போதும் மாற்றம் இல்லை.” என்று பதிவிட்டுள்ளார்.

35 வயது பிரியங்கா சோப்ராவும் 25 வயது அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசும் நெருக்கமாக பழகுவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் நியூயார்க்கில் ஜோடியாக கால்பந்து போட்டியை பார்த்து ரசித்த வீடியோவும் வெளியானது. இப்போது இருவரும் ஜோடியாக வரும் இன்னொரு படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.